முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை செலவினத்தை அரசே ஏற்றுக் கொள்வது நடைமுறைக்கு வந்து விட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டமும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. கொரோனா தடுப்பூசிகளும் இதுநாள் வரை இல்லாத அளவுக்கு கடந்த ஒரு மாதத்தில் போடப்பட்டன.
ஊரடங்கு என்பது பொதுமக்களுக்கு வேப்பங்காய் போன்றது. அத்தகைய காலக்கட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பல சரக்கு வினியோகமும் தட்டுப்பாடின்றி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுதிக்கேற்ற பணி நியமன ஆணை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை வைப்புத்தொகை, கொரோனா தடுப்பு பணியில் இறந்த அரசு துறை அலுவலர் குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.25 லட்சம் வரை நிவாரணம் என அரசின் நிதி ஒதுக்கீடுகளும் பயனுள்ளதாகவே அமைந்தது.
கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களின் தலையில் தொங்கிய கத்தியான பிளஸ் 2 தேர்வும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
சமூக வலைதளங்களில் வரும் புகார்களை கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து உடனடியாக தீர்த்து வைக்கிறார். மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு அரசு சார்பில் மரியாதை, விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் உள்ளிட்ட அறிவிப்புகள் இலக்கிய உலகத்தையும் முதல்வர் வசம் ஈர்த்தது.
தலைமைச் செயலாளர் தொடங்கி அரசு துறைகளின் முக்கிய அதிகாரிகள் நியமனம் ஊழலற்ற ஒரு அரசுக்கான ஒளிர்க்கீற்று. தமிழகத்தில் இப்போது நிகழும் தலைகீழ் மாற்றங்கள் ஒரு விடியலுக்கான வெளிச்சத்தை பாய்ச்சுகின்றது.