fbpx
Homeதலையங்கம்அடிப்படை உரிமையை பறிக்கும் சுங்கக் கட்டணம்!

அடிப்படை உரிமையை பறிக்கும் சுங்கக் கட்டணம்!

தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து ஒன்றிய அரசு பெருந்தொகையை வசூல் செய்து வருகிறது. தனியார் மூலம் வசூல் செய்யப்படும் இந்த சுங்கச் சாவடிகள் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு ஒருபுறமிருக்கிறது.

தமிழகத்தில் 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி சுங்க கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயரவிருக்கிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலின்படி, சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக நம்பர் பிளேட்களைப் படிக்கும் கேமராக்களைப் பொருத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி, தானியங்கி எண் பிளேட் ரீடர் (ANPR) கேமராக்களை பொருத்தவிருப்பதாக கூறியுள்ளார்.

விரைவில் தானியங்கி எண் பிளேட்டை அனைத்து வண்டிகளிலும் பொறுத்தவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வண்டியில் செல்லும்போது நேரடியாக கணக்கில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்றும், இந்த முறை வெற்றிபெற்றால் நாட்டில் சுங்கச் சாவடிகள் அனைத்தும் மூடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இத்திட்டத்தின் முன்னோடி முயற்சி நடைபெற்று வருவதாகவும், சுங்கக் கட்டணம் செலுத்தாத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியொரு திட்டமிருப்பதாக அறிவித்து விட்டு, அதற்கிடையில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அவசியம் தானா? இது வாகன ஓட்டிகளை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலையை அடுத்து தற்போது மாவட்டங்களுக்கு உள்ளே பிற மாவட்டங்களை இணைக்கும் சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து ஒன்றிய அரசு வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

வாகனம் வாங்கும் போதே அனைத்து வரிகளையும் முழுமையாக செலுத்தி விடுகிறோம். இருந்த போதிலும் வெள்ளையன் போய் கொள்ளையன் வந்தது போல் சுங்கச்சாவடி மூலமாக கட்டணம் வசூலிப்பது என்பது மாநில உரிமைகளை பறிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

சுங்கக்கட்டண வசூல் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை!

படிக்க வேண்டும்

spot_img