fbpx
Homeதலையங்கம்ஆணாதிக்கத்தால் பெண்களுக்கு கொடுமை!

ஆணாதிக்கத்தால் பெண்களுக்கு கொடுமை!

சென்னை பறங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியா, ரயில் முன்னால் தள்ளிவிடப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இது தமிழகத்தை உலுக்கிய சம்பவமாக பேசப்பட்டு வருகிறது.

பாலின வன்முறைக்கு பலியான பெண்களின் நீண்ட பட்டியலில் சத்யபிரியாவின் பெயரும் இனி இடம் பெறும். தமிழகத்தில் ‘ஸ்டாக்கிங்’ என்று அழைக்கப்படும் ‘விடாது பின் தொடருதல்’ செயல்பாட்டுக்குப் பலியான பெண்கள் பட்டியல் மிக நீளமானது.

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது மனதுக்குப்பிடித்த மாணவியை அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்வது, அப்பெண்ணுக்கு பேச விருப்பமில்லை என்றாலும் தொந்தரவு செய்வது போன்றவற்றில் பலரும் ஈபடுவதை நாம் பார்த்திருப்போம். நாமே கூட அதனைச் செய்திருப்போம். திரைப்படங்களில் நாயகியை பின்தொடரும் நாயகனைப்பார்த்திருப்போம்.

பெண்ணுக்கு விருப்பமில்லை என்று ஒதுங்கி போகாமல் தனது ஆணாதிக்கத்தை செயல்படுத்தும் போது அது குற்றமாகி விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது. என்னையே வேண்டாம் என்கிறாயா? என்ற ஆணாதிக்கம் மேலோங்கி, கொலை செய்யும் அளவிற்குப் போய் விடுகிறார்கள். அது தான் இப்போது சத்யபிரியா விஷயத்தில் நடந்திருக்கிறது.

இப்போது காலம் மாறிவிட்டது. ஆண்களுக்கு நிகராகப்பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவது என பலவற்றிலும் நிமிர்ந்து நிற்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் தங்கள் மீது ஆணாதிக்கம் திணிக்கப்படுவதை விரும்புவதில்லை.

பிடிக்கவில்லை எனில் தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதனை ஏற்காமல் ஒரு சில ஆண்கள் எதிர்வினையாக வன்முறையை கையில் எடுக்கும்போது கத்திக்குத்து, ஆசிட் வீச்சு, கொலை என நிகழ்கிறது. இதனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும் குற்றச் செயலில் ஈடுபடும் ஆண்களின் வாழ்க்கையும் சின்னாபின்னமாகி விடுகிறது.

இதனை ஒரு சமூக உளவியல் பிரச்சனையாக அணுக வேண்டியதிருப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை, ஆண்பிள்ளைகள் பெற்றோரின் ஆணாதிக்க கட்டுப்பாட்டில் தான் வளர்க்கப்படுகிறார்கள். இது மாற வேண்டும்.

பெண்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது, இடைவெளியை கொடுப்பது ஆகியவற்றை கற்றுக்கொடுத்து ஆண் பிள்ளைகளைப் பெற்றோர் வளர்க்க வேண்டும். ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமானால் காலத்திற்கு ஏற்ப பெற்றோரும் மாற வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் முறை மாறவேண்டும்.

ஆண் குழந்தைகளுக்கு தோல்வி என்பது வாழ்வில் இயல்பானது என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கக் கூடாது. நினைப்பதெல்லாம் கிடைத்துவிடும் என்ற எண்ணம் மனதில் பதிந்து விடக்கூடாது.

இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் தான் ஆணாதிக்க சிந்தனை உடைபடும், குற்றங்களும் குறையத் தொடங்கும்.

சத்யபிரியாவுக்கு நேர்ந்தது போல் இன்னொரு சம்பவம் நடக்கக்கூடாது என்பதே அனைவரது எண்ணம்.

கொலையாளிக்கு சட்டப்படி கடும் தண்டனை கிடைக்கப்போவது திண்ணம். அது தடம் மாறிச் செல்லும் இளைஞர்களுக்குப் பாடமாக இருக்கும்; இருக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img