fbpx
Homeதலையங்கம்ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒத்துழைப்பு தொடரட்டும்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒத்துழைப்பு தொடரட்டும்!

ஆன்லைன் சூதாட்டம் பல இளைஞர்களின் உயிரோடு விளையாடியது. தமிழகத்தில் பல லட்சம் ரூபாயை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டனர். குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவங்களும் அரங்கேறியது. பல குடும்பங்கள் சீரழிந்து குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். அதனால் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


தமிழக அரசும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய முற்பட்டது. அதன் விளைவாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


இந்த ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அரசிதழில் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானபிறகு சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும்.

சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கண்காணிக்க ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி. இதன் மூலம், ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகளுக்கும் பண இழப்புகளுக்கும் முடிவுரை எழுதப்படும் என்பது உறுதி. இந்த சட்டத்தை விரைவாகக் கொண்டு வந்து அமல்படுத்தத் தயாராகும் தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.


தமிழக அரசுக்கு ஆளுநரின் ஒத்துழைப்பும் தொடரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img