fbpx
Homeதலையங்கம்இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு மோகம் ஏன்?

இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு மோகம் ஏன்?

ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்துவரும் நிலையில் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனாலும் உக்ரைனில் போர் மேகம் பரவலாக படர்ந்துள்ளதால் இன்னும் ஏராளமான மாணவ, மாணவிகள் உண்ண உணவும் குடிக்கத் தண்ணீரும் கூட இன்றி சொல்லொணா துயரத்தில் உள்ளனர்.

குண்டுவீச்சில் கர்நாடக மாணவர் நவீன் பலியாகி இருக்கிறார். எந்த நேரத்தில் குண்டு விழுமோ என்ற அச்சநிலையே ஓங்கி உள்ளது.

அண்டை நாட்டு எல்லைகள் வழியாக மாணவர்களை மீட்டு வருகிறது மத்திய அரசு. உக்ரைனில் அதிகப்படியான மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காகவே சென்றுள்ளனர்.

இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளை விட்டுவிட்டு ஏன் மாணவர்கள் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இந்தியாவில் 562 மருத்துவ கல்லூரிகள் உள்ளன, 2021ம் ஆண்டு நிலவரப்படி 84,649 மருத்துவ இடங்கள் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க அயல்நாடுகளுக்கு செல்கின்றனர்.

மருத்துவம் படிக்க ஆகும் செலவே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட அளவிலான மருத்துவ இடங்களுக்கு கடுமையாக போட்டியிடுவதைக் காட்டிலும், வெளிநாடுகளில் மிகவும் எளிதாகவே சீட் கிடைப்பது மாணவர்கள் வெளிநாடு செல்ல காரணம். சீனா, ரஷ்யா மற்றும் உக்ரைனில் அதிகப்படியான இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்.

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க இருப்பிட செலவு, கல்விக் கட்டணம், இந்தியா திரும்பி வந்ததும் எழுதும் ஸ்கிரீன் தேர்வு செலவு என 6 வருடத்திற்கும் ஒட்டுமொத்தமாகவே ரூ.35 லட்சம்தான் செலவாகிறது.

ஆனால், இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்திற்கு மட்டுமே ரூ.45 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை செலவாகிறது. ஒவ்வொரு வருடமும் 20 முதல் 25 ஆயிரம் மாணவர்கள், மருத்துவப் படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

கட்டணம் குறைவு என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இந்தியாவில் சீட் குறைவாக இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் நீட் நுழைவுத் தேர்வில் 7-8 லட்சம் மாணவர்கள் வரை தேர்ச்சி பெற்றாலும் கூட, நம்மிடம் இருப்பது என்னவோ 90,000 மருத்துவ இடங்கள் மட்டும்தான்.

இதில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் அரசுக் கல்லூரிகளில் உள்ளன. ஆனால் நீட்டில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களை விட குறைந்த கட்டணம்தான். ஆனால், அதற்கும் அதிக நீட் மதிப்பெண்கள் தேவை.

அதுபோலவே, தனியார் கல்லூரிகளில் 20,000 மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களே உள்ளன. ஆனால், அதிகப்படியான கட்டணம் காரணமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட மேலாண்மை இடங்களில் மருத்துவம் படிக்க மாணவர்களால் முடிவதில்லை.

ஏனெனில் மேலாண்மை இடங்களுக்கான கட்டணம் மட்டும் 4.5 வருட படிப்பிற்கு தோராயமாக ரூ.30 லட்சம் முதல் 1.2 கோடி ரூபாய் வரை ஆகிறது.

ஆக நீட் தேர்வு மற்றும் குறைந்த அளவிலான கட்டணம் உள்ளிட்ட காரணங்களுக்காகவே வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவிலும் மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை குறைப்பது, இடங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான் மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

இந்த கோரிக்கை நிறைவேறுவது சாத்தியமா?

படிக்க வேண்டும்

spot_img