fbpx
Homeபிற செய்திகள்உயர்கல்வி, ஆராய்ச்சியில் அதிகளவில் பெண்கள் ஈடுபட வேண்டும்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்

உயர்கல்வி, ஆராய்ச்சியில் அதிகளவில் பெண்கள் ஈடுபட வேண்டும்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்

இன்று ஆண்களை விட பெண் களே அதிக தேர்ச்சியும், முதலிடமும் பெறுகிறார்கள். ஆனால் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

இந்நிலை மாற வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார். அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவ னத்தில் நேற்று (அக்.6) “21ம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவியரைத் தயார்படுத்துதல்” என்ற பொருண்மையில் கருத்தரங்கு நடந்தது.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
பட்டதாரிப் பெண்கள் பயனுள்ள குடிமக்களாக மாறுவதற்கு தேவையான திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

பெண்கள் உயர் கல்வியை தொடர முடியாமைக்கு காரணமாக கழிப்பறை இன்மை இருந்ததை உணர்ந்த பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தினை தொடங்கி வைத்து, அதன் மூலம் இந்தியா முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்தினார்.

இளம் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்வதால், உயர்கல்வியில் தடை ஏற்படுகின்ற காரணத்தினால், திருமணத்திற்கான வயது வரம்பினை 18-ல் இருந்து 21- ஆக அரசு நிர்ணயித்து இருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு நம்பிக்கையும், ஊக்குவிப்பையும் வழங்கினால், அவர்கள் மிகச் சிறப்பாக வளர்வார்கள். இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சியையும், அதே சமயத்தில் தளர்ச்சியையும் கூட தந்திருக்கிறது. பெண்களுக்கு வேண்டியது துணிச்சலும், சாதிக்க வேண்டும் என்ற மனநிலை மட்டுமே.

உலகம் முழுவதும் உள்ள கல்வி முறை, மாறிவரும் உலகளாவிய தர நிலைகளை சந்திக்கும் வகையில், மாறியுள்ளது. 21-ம் நூற்றாண்டு மாணவர்களின் உலகளாவிய தேவைகளைக் கவனமாக ஆய்வு செய்த பிறகு, இந்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ உருவாக்கி உள்ளது.

வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவதுதான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். 50% பெண்கள் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.

பெண்களுக்கென்று சில வரைமுறைகள் உள்ளன. அதனைப் பின்பற்றுவது அவசியம். பெண்கள் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். உடை அணிவதில் கவனம் கொள்ள வேண்டும்.

அறிவை விரிவுபடுத்த வேண்டும். பெண்களின் வளர்ச்சிக்காகவே பிரதமர் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். நாம் இன்றைக்கு பெற்றிருக்கிற கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்காக சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே, பல்வேறு பெண்கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக் கிறார்கள்.

இன்று ஆண்களை விட பெண்களே அதிக தேர்ச்சியும், முதலிடமும் பெறுகிறார்கள். ஆனால் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பெண்களின் எண்ணிக்கை குறை வாகவே இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:
1957-ல் பெண் கல்வி மேம்பாட்டிற்காக டாக்டர் தி.சுஅவினாசிலிங்கம் இக்கல்வி நிறுவனத்தை தொடங்கினார்.

இராமகிருஷ்ண பரமஹம்சரின் கொள்கைகளையும் காந்தியத்தையும் அடியொற்றி இந்நிறுவனம் இயங்குகிறது. மதிப்பீட்டுக் கல்வியையும் பண்பாட்டுக் கல்வியை யும் கற்பிக்கிறது என்றார்.

வேந்தர் பேராசிரியர் ச.ப.தியாகராஜன் தனது சிறப்புரையில், வளர்ந்த நாடாக இருந்த இந்தியா, இன்று வளர்ச்சி அடைந்த நாடாக மாறி உயர்கல்வியில் 5-ம் இடத்தில் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாணவர்கள் வேலையைத் தேடும் நிலைமாறி வேலையை வழங்கும் நிலைக்கு மாற்றுவதேயாகும்.

கல்வி மற்றும் ஆய்வின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வருவதை இக்கல்வி முறை பின்பற்றுகிறது. இக்கல்வியோடு பன்நோக்கு திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாக இன்றைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளை தேசிய கல்விக் கொள்கை முன்னிறுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் வரவேற்றார்.
வணிகவியல் மற்றும் மேலாண்மை புலமுதன்மையர் முனைவர் சித்ராமணி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img