பெரும்பாலும் இளைஞர்கள் நேரத்தை பொருட்படுத்தாமல் உழைப்பவர்கள். அவர்கள் உழைக்க சென்ற மாநிலங்கள், அவர்களது கடும் உழைப்பால் உயர்ந்தன. பெருநகரங்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டன.
இவர்களால் டெல்லி, மும்பை, சென்னை, கோவை போன்ற நகரங்கள் செழுமை பெற்றிருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் தென்னிந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் குடியேறி இருக்கிற புலம் பெயர் தொழிலாளர்கள் பல தொழில் கட்டுமானங்களுக்கு அடித்தளமாகி இருந்தனர்.
சென்ற கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகம் விட்டு கிளம்பியதும் பல தொழில்கள் ஸ்தம்பித்து போயின. மறுபடியும் திரும்பி வந்து அவர்களால் தொழில்கள் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் கொரோனா 2வது அலை பரவி அவர்களை கலக்கமுற வைத்து விட்டது.
வாழ்தல் குறித்த அச்ச உணர்வே அவர்களை சொந்த ஊர் நோக்கி செல்ல வைக்கிறது. பிழைக்க வந்த இடங்களில் போதுமான பாதுகாப்பும், வருமானத்திற்கு உத்தரவாதமும் முறையாக இருந்தால் அவர்கள் சொந்த ஊர் திரும்ப முயற்சிக்கமாட்டார்கள்.
தடுப்பூசி, கொரோனாவிலிருந்து பாதுகாப்பு, குறைந்தபட்ச வாழ்வாதாரம் இவற்றை அரசோ, அவர்கள் சார்ந்திருந்த தொழில் நிறுவனங்களோ உறுதி படுத்தினால் போதும். கொடுமையான கொரோனா கால புலம்பெயர்தல் நடைபெற வாய்ப்பிருக்காது.
உழைப்பு தேவையென்றால் உழைக்கும் மனிதர்களின் பாதுகாப்பும் அத்தியாவசியத் தேவை. இதை உணர்ந்து செயல்படுவோமாக.