fbpx
Homeபிற செய்திகள்‘ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்’ 750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு- முதல்வருக்கு விருதுநகர் மகளிர்...

‘ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்’ 750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு- முதல்வருக்கு விருதுநகர் மகளிர் நெஞ்சம் நிறைந்த நன்றி

விருதுநகர் மாவட்டத்தில், சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு, 750 கர்ப்பிணிகளுக்கு, ‘ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்’ கீழ், வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, கர்ப்பிணிகளின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களின் வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் ஒரு திட்டமாகும்.

இதன் முக்கிய நோக்கம், கர்ப்பிணிகள் மற்றும் 0-5 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தி, ஊட்டச்சத்து பற்றாக்குறை, குழந்தைகளின் இறப்பு மற்றும் கர்ப்பிணிகளின் பேறுகால இறப்பு இல்லாத வளமான சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

இத்திட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த தகவல்களை அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் வீடுதோறும் சென்று சேர்ப்பதற்கும், சத்துணவு, சுகாதாரக் கல்வி அளிப்பதுடன் தாய்பால் வாரவிழா, ஊட்டச்சத்து வாரவிழா, சமுதாய வளைகாப்பு விழா, கைகழுவும் தின விழா, குழந்தைகள் தினவிழா, ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி தினம், அயோடின் தின விழா, கிராம சுகாதார ஊட்டச்சத்து தினம், சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை அங்கன்வாடி மையங்களில் நடத்துதல் போன்ற விழாக்களின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

செறிவூட்டப்பட்ட உணவு
கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் ஊட்டுதலை விரைவில் தொடங்குதல் மற்றும் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், இணை உணவு வழங்குதல், குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்தல், ரத்த சோகையை தடுத்தல், பெண்கல்வி, சரிவிகித உணவு, சரியான வயதில் திருமணம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், ஆரோக்கியமான செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் உள்ளிட்ட கருத்துகளை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் பொதுமக்களிடையே சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க வயதுக்கேற்ற உயரம், எடை ஆகியவை உள்ளதா என்பது குறித்து அங்கன்வாடி மையங்களில் அளவீடு எடுக்கப்படுகிறது.

இவை இல்லாத குழந்தைகளின் விவரம் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு குழந்தைகளிடையே குள்ளத்தன்மை மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் விழப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குழந்தைகளின் வாழ்நாளில் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி, ஊட்டச்சத்தின் குறைபாட்டை தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அறிவியல் பூர்வமாக
மக்களும், வருங்கால சந்ததிகளும் எந்த ஒரு நோய் தொற்றும் இல்லாமல் இருந்தால் தான் அது ஒரு நல்ல ஆட்சிக்கான சான்றாகும். வெளி நாட்டிலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் நிறுவனங்களை நிறுவ ஆர்வம் காட்டுகின்றன.

அதற்கு காரணம், மனிதவள மேம்பாட்டில் இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பெண்கள் உருவாக்கக்கூடிய குழந்தைகள்தான் நாளைய மருத்துவராக, பொறியாளராக, தொழில்நுட்ப வல்லுநராக உருவாகின்றனர்.

அந்த சந்ததிகளை உருவாக்கக்கூடிய பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.

அதனை கருத்தில் கொண்டு, வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும்.

சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணிகளும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு, 750 கர்ப்பிணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆகியோர் வளைகாப்பு சீதனப் பொருட்களை வழங்கினர்.

சிறப்பு முயற்சி
மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, கர்ப்பிணிகளின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யும் பொருட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் ‘இரும்பு பெண்மணி’ என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கி வைத்து, இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்துமிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

“சிறப்பான சீர்வரிசை”
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கர்ப்பிணிகள் கூறியதாவது:
என் பெயர் சத்யபிரியா. கணவர் சித்ரவேல். கொத்தனார் வேலை செய்கிறார். 8 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் கர்ப்ப காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும், என்னென்ன ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்கள்.

மாதந்தோறும் எடை பரிசோதனை செய்து, ஆலோசனைகளை பெற்று வருகிறேன். வழங்கப்படும் சத்துமாவினை உண்டு வருகிறேன். வீட்டில் நடத்துவதுபோல் புடவை, தட்டு, மாலை, வளையல்கள், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

5 வகையான உணவு வழங்கப்பட்டது. எனக்கு பூரிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மகிழ்ச்சிக்குள்ளாக்கிய முதல்வர், அமைச்சர்கள், ஆட்சியருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

“மனம் மகிழ்ந்தது”
என் பெயர் உமா மகேஸ்வரி. என் கணவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். கர்ப்பிணியாக உள்ளேன். தமிழக அரசு மூலம் எனக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

நான் மிகவும் மனநிறைவோடு உள்ளேன். எனது வீட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தியிருந்தால் கூட இந்த அளவிற்கு பெரிய நிகழ்ச்சியாக இருந்திருக்காது. என்னை போன்ற கர்ப்பிணிகள் கலந்து கொண்டு, பெரிய விழாவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது, மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img