fbpx
Homeபிற செய்திகள்ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டத்தில் 2,637 பேருக்கு மின் இணைப்பு வழங்கல் 4,415.96...

ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டத்தில் 2,637 பேருக்கு மின் இணைப்பு வழங்கல் 4,415.96 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி

முதல்வரின் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், தற்போது வரை நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 2,637 விவசாயிகளின் 1,856 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 781 திறந்த வெளி கிணறுகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக மானாவாரி பயிர் செய்து வந்த 4,415.96 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறவுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 23.9.2021 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத வகையில், அதிகபட்ச அளவாக, இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

ரூ.3,025 கோடியில் திட்டம்
முதல்வர் பேசியதாவது: இலட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வில் விடியலை உருவாக்கக்கூடிய வகையில், ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டம் ரூ.3,025 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

சில திட்டங்கள் அந்த நேரத்துக்கு மட்டுமே தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்கு மட்டுமே தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் தான் பல தலைமுறைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உழவர்கள் பயன்பெறுவதால், அவர்கள் மட்டுமல்லாமல், அதிகளவில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து மாநிலத்து மக்களுக்கு பயனளிக்கும் திட்டமாக இத்திட்டம் உள்ளது.

கடந்த 2006-11 -ம் ஆண்டு காலத்தில் 2,09,910 (2 இலட்சத்து 9 ஆயிரத்து 910) பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன. ஆனால் 2011-21 -ம் ஆண்டு வரை கடந்த 10 ஆண்டுகளில் 2,21,579 விவசாயிகளுக்கு மட்டுமே புதிய இணைப்புகள் தரப்பட்டன.

ஏன் இலவச மின்சாரம்?
1978-ம் ஆண்டு முதல் உழவர்கள் மின் கட்டணத்தில் சலுகை கேட்டு போராடினார்கள்.ஆனால் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1990-ம் ஆண்டு மின் கட்டணத்தில் சலுகை அல்ல, விவசாயிகளுக்கு மின்சார கட்டணமே கிடையாது என்று அறிவித்து, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கினார்.

உழவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் தற்போது, ஒரு லட்சம் புதிய இணைப்புகள் என்ற இந்தப் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

முதலமைச்சரின் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், தற்போது வரை நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 432, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 371, பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,051, இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 180, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 394, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 209 என தற்போது வரை மொத்தம் 2,637 விவசாயிகளின் 1,856 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 781 திறந்த வெளி கிணறுகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக மானாவாரி பயிர் செய்து வந்த 4,415.96 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறவுள்ளது.

‘விவசாயத்தை டெவலப் பண்ணிக்குவேன்’
விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம், அத்தியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி க.சுரேஷ் தெரிவித்ததாவது:
எனது தந்தையார் கருப்பண்ணன். நான் எம்.பி.ஏ படிச்சுட்டு சென்னையில தனியார் கம்பெனில மார்க்கெட்டிங் வேலை செஞ்சுட்டு வந்தேன்.

எங்க அப்பா அம்மாவுக்கு வயசானதாலே, கூட இருந்து பாத்துக்கனும்னு ஆசையா இருந்துச்சு. அதனால இங்க ஊருக்கே வந்துட்டேன். அப்பா அம்மா விவசாயம் பண்ணிகிட்டு இருந்ததாலே அத நானும் பாத்துகிட்டேன். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்குது.

இது வானம் பாத்த பூமி. அதனால மழை பேஞ்சாத்தான் மகசூல் கிடைக்கும். இப்பெல்லாம் விவசாயம் பன்னறது பெரிசு. அதுலையும் கரண்ட் வேணும்னு கனெக்சன் வாங்குறது எல்லாம் ஒரு குதிரை கொம்பு மாதிரி. ஏனா நான் 2012-ல அப்ளை செஞ்சேன்.

இவ்வளவு நாளா கரண்ட் கனெக்சன் கிடைக்கல. இப்ப முதலமைச்சர் வந்த அப்பறம்தான் ஒரு லட்சம் ஸ்கீம்ல கரண்ட் கனெக்சன் கிடச்சுருக்குது.
ஐயா மட்டும் வரலனா எனக்குலா எப்போ கனெக்சன் கெடைக்கும்னே தெரியில.

இப்ப இத வச்சு நான் விவசாயத்த நல்ல டெவலப் பண்ணிக்குவேன். விவசாயத்துக்கு மின்சார இணைப்பு வசதி செஞ்சு குடுத்த முதல்வருக்கு ரொம்ப நன்றிங்க என்றார்.

‘தேடி வந்த இலவச கரென்ட் கனெக்சன்’
விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற, நாமக்கல் மாவட்டம், செங்கோடம்பாளையம், மாரப்பன்நாயகன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமிகவுண்டர் தெரிவித்ததாவது:

எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் இருக்குது. எங்களுக்கு ஆடு, மாடு, கோழி வளர்த்துதான் வருமானம் கிடைக்குது. அதுக்காக நிலத்துல சோளம், ஆமணக்கு, மாட்டு தீவனம் பயிர் பண்றோம். 2013-ல் விவசாய கரண்ட் கேட்டு விண்ணப்பிச்சு இருந்தோம்.

கனெக்சன் கிடைக்கல. அதனால பூந்தோட்ட கரண்ட் கனெக்சன் வாங்கி தேவைக்கு மட்டும் தண்ணி பாய்ச்சுனோம். பூந்தோட்ட கனெக்சன்ல 2 மாசத்துக்கு 4,000 பில் வந்துச்சு. அதனால அவசரத்துக்கு கூட மோட்டர் போட மாட்டோம்.

எப்பதான் பிரச்சனை தீரும்னு பயிர் பண்ணறதுக்கு கூட சங்கடமா இருந்துச்சு. முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா இப்ப கரண்ட் கனெக்சன் குடுத்துருக்கறதா சொல்லி ஈ.பி.காரங்க வந்து ஒரு வாரத்துக்கு முன்னாடி கனெக்சன் குடுத்தாங்க.

எங்களுக்கு நல்லா தண்ணி இருக்குது. பயிர் பண்ணுனா நெல் கூட விவசாயம் பண்ணலாம். 10 வருசமா கரண்ட்டுக்கு கஷ்டப்பட்ட எங்களுக்கு தேடி வந்து இலவசமா கரண்ட் கனெக்சன் குடுத்த முதல்வர் ஐயாவுக்கு நன்றி என்றார்.
‘எங்க நிலம் முழுக்க விவசாயம் செய்றோம்’

விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி, இளையாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி நல்லுசாமி தெரிவித்ததாவது:

நாங்க காலங்காலமா விவசாயம் தான் பண்ணிட்டு இருக்கோம். நா சின்ன பையனா இருக்கப்பல்லாம் எங்க அப்பாரு ஏத்தம்வச்சு எறைச்சு தண்ணி பாய்ச்சுவாங்க. கிணறு நல்லா பெரிய கிணறா செவரேல்லாம் கட்டி வச்சாங்க. அப்பறமா எங்க காலத்துல ஆயில் என்ஜின் வச்சு தண்ணி பாய்ச்சுனோம்.

டீசல் விலை ஏறஏற சும்மா ஒப்புக்கு விவசாயம் பண்ணற நிலைமைக்கு வந்துட்டோம். 2005-ல கரண்ட் சர்வீஸ் கேட்டு விண்ணப்பிச்சிருந்தோம். இப்ப கிடைச்சுரும், அப்ப கிடைச்சுரும்னு 16, 17 வருசம் ஆச்சு.

இப்ப ஸ்டாலின் ஐயா ஒரு லட்சம் கரண்ட் ஸ்கீம்ல குடுக்கறதா சொல்லி இருந்தாரு. 1 மாசத்துக்கு முன்னாடி தான் கம்பம் நட்டு கனெக்சன் குடுத்தாங்க. விவசாயிகளுக்கு மரியாதை குடுத்து கலைஞர் ஐயா இலவச மின்சாரம் குடுத்தாரு.

இப்ப ஸ்டாலின் ஐயா எங்களுக்கு கரண்ட் கனெக்சன் குடுத்து இருக்காரு. நாடு செழிக்க, விவசாயத்திற்கு புத்துயிர் வழங்கும் வகையில எங்க நிலம் முழுக்க விவசாயம் செய்ய உதவிய ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img