மாங்காய்கள் முதிர்ந்ததும் பறித்து வைக்கோலால் மூடி பழுக்க வைப்பார்கள். குறைந்தது 5 முதல் 7 நாட்களில் பழுத்து விடும்.
அதை எடுத்து சாப்பிடும் போது தித்திக்கும் மாம்பழத்தின் சுவை நாவில் தேன் ஊறவைக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.
இதனால் உடலுக்கு ஆரோக்கியம் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
ஆனால் ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிட்டதுமே நாவில் ஊறல், தொண்டையில் புண். என்று தொடங்கி வயிற்று வலி வரை பல பிரச்சினைகளை சந்திக்கிறோம்.
சீக்கிரம் காசு பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையால் முதிர்ச்சியடையாத மாங்காய்களைக் கூட பறித்து ரசாயன கல் வைத்தால் இரண்டே நாட்களில் முற்றிலும் மஞ்சள் நிறமாகி அழகாக பழுத்த மாம்பழம் போல கண்ணைக் கவரும்.
ஆனால் அந்த மாம்பழம் விஷம் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இது இந்த சீசன் மாம்பழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மட்டும் தான் ரசாயன கல் வைக்கப்படுகிறதா? இல்லை வாழைப்பழங்களும் ரசாயனங்கள் மூலமாகவே பழுக்க வைக்கப்படுகிறது.
இயற்கையாக பழுக்க வைக்கப்படாத இந்த பழங்கள் நன்றாக பழுத்துவிட்டால் சாப்பிட முடியாத அளவுக்கு அழுகிவிடுகிறது.
கலப்பட தடுப்புத் துறையை பொறுத்தவரை ஒரு பெரிய வழக்கு போட்டாச்சு, சிலர் மீது வழக்கும் பதிவு செய்தாகிவிட்டது.
அதாவது அந்த துறையின் செயல்பாட்டுக்கு கணக்கு காட்டியுள்ளன. அவ்வளவு தான். சோதனையும் தண்டனையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான பாடம் புகட்டி இருந்தால் இப்படி ஒவ்வொரு சீசனிலும் இது தொடர்கதை ஆகாது அல்லவா? இது சுவை மிகுந்த மாம்பழத்தில் மட்டுமல்ல அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மீன்களிலும் கலக்க தொடங்கியாச்சு.
வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரும் மீன்களை பதப்படுத்த பிணங்களை பதப்படுத்தும் ரசாயனங்களை பயன்படுத்துவதும் நடக்கத்தான் செய்கிறது.
இது உடலுக்கு மிகவும் தீங்கானது. இப்படி ரசாயனங்கள் கலக்கப்பட்டது தீங்கு விளைவிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அதே நேரம் இவை எப்படி கிடைக்கிறது? எங்கே உற்பத்தி ஆகிறது? என்பதை தெரிந்து அதை தடுத்தால் போதுமே. அப்படி எதுவும் நாம் செய்வதில்லை.
இது ஏதோ கடமைக்காக செய்வது, அவ்வளவு தான். தோட்டங்களை அழிக்கும் எலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது போல் இந்த சமூகத்தில் கலப்படம் என்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் உடலில் விஷம் ஏற்றப்படுகிறது என்பதை கலப்படக்காரர்கள் யோசிக்க வேண்டும்.
அதேபோல் இந்த மாதிரி கலப்படங்களில் இருந்து உணவு பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அந்த உணவு பொருட்களை சாப்பிடுகிற மனிதர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் சட்டம், நடவடிக்கை, இதற்கென்று ஒரு துறை எல்லாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நம் கண் முன்னால் நடைபெறும் இந்த குற்றங்களை தடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறையினரும் குற்றத்துக்கு துணை போகிறவர்களாகத்தான் கருதப்படுவார்கள்.
ஆழாக்கு பாலில் அரைப்படி தண்ணீர் என்று தொடங்கிய கலப்படம் காலங்களை கடந்தும் இன்று நவீன வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கலப்படங்களும் புது வடிவம் பெற்றுள்ளது.