fbpx
Homeதலையங்கம்காமராஜர் வழியில் ஸ்டாலின் கல்விப்பணி!

காமராஜர் வழியில் ஸ்டாலின் கல்விப்பணி!

கல்வி,- படிப்பு,- பள்ளிகள்,- கல்லூரிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அளவிலான முக்கியத் துவத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அவரது எண்ணத்தில் உதித்த மாபெரும் திட்டம் தான், ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்‘. அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளும் மேம்படுத்தப்பட இருக்கிறது. படிக்கும் இனிய சூழலை உருவாக்குவதாக இத்திட்டம் அமையப் போகிறது.

இதேபோலத் தான் கல்லூரிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவு சார் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அறிவுசார் நகரத்தை உருவாக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கிறது இந்த அரசு. பட்டப்படிப்பு படிக்க வரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலமாக ஏராளமான மாணவிகளை கல்லூரிக் கல்வியை நோக்கி ஈர்க்கிறது இந்த அரசு.

அதேபோல ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்லும அரசு பள்ளி மாணவிகளுக்கும் மாதம்தோறும் தலா ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருக்கிறார்.

கல்வி அறிவை ஊட்டி விட்டால் பெண்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். பாலியல் வன்கொடுமை, பணிபுரியும் இடங்களில் சீண்டல்கள் போன்ற தாங்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைகளுக்கும் அவர்களே தீர்வு காணும் நிலை உருவாகி விடும்.

“கல்வி என்ற ஒன்றை மட்டும் கொடுத்து விட்டால் அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை” என்றார், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர். அவரது பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டுக்கள்!

படிக்க வேண்டும்

spot_img