fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே 200 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு வினர், கிருஷ்ணகிரி அருகில் உள்ள கல்லுகுறுக்கி என்ற ஊரிலிருந்து சாமந்தமலை செல்லும் வழியில் உள்ள ராமாயணபள்ளி என்ற ஊரில், இரண்டாவது முறையாக ஆய்வுப்பணிக்கு சென்ற போது, கோயிலின் முன்புறம் மூன்று நடு கற்கள் வழிபாட்டுக்கு வைத்திருந்ததை பார்த்தனர்.

அதில் இரண்டு நடு கற்களுக்கு அழகாக வண்ணம் தீட்டி இருக்கிறார்கள். முதலாவது நடுகல்லில் வண்ணம் தீட்டவில்லை. இது குறித்து அரசு அருகாட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது:

முதலாவது நடுகல், வீரன் போரில் இறந்திருக்கிறான். அவனுடைய இறப்புக்குப் பின் அவருடைய இரண்டு மனைவிகளும் அவனோடு உடன்கட்டை ஏறி இறந்திரு க்கிறார்கள்.

இரண்டாவது நடுகல், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வீரன் ஆநிரைகளுக்காக புலியோடு சண்டையிட்டு இறக்கிறான். புலியும் இறந்துவிடுகிறது. இது புலிகுத்திப்பட்டான் கல் ஆகும்.

அவன் இறந்த பின் அவனுடைய இரண்டு மனைவியரும் அவனை எரிக்கும் சிதையில் பாய்ந்து உயிர் துறக்கிறார்கள்.

இந்த நடுகல்லில், வேட்டை நாய்கள் இரண்டும் காட்டப்பட்டுள்ளது. அந்த காலத்தில் வேட்டைக்கு நாய்களையும் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்கின்றது.

கீழே வில்லும், மேலே அம்புகள் காட்டப்பட்டுள்ளன. மூன்றாவது நடுகல், பூசலில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல். இவனின் இரண்டு மனைவிகளும் அவன் சிதையில் தீயில் பாய்ந்து இறந்துள்ளதை இது காட்டுகின்றது.

இவை விஜயநகர காலத்து நடுகற்கள். ஏறக்குறைய 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மூன்று நடுகற்களிலும் கிளி காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் இரண்டு கிளிகள் உள்ளன. இவை வளமையின் சின்னமாக கருதப்படுகின்றது.

மூன்றும் சமகாலத்தவை என்பது அமைப்பில் இருந்து தெரிகின்றது. அந்த காலத்தில் இருதார மணம் இருந்திருப்பதையும் இந்த நடுகற்கள் உறுதி படுத்துகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதையுண்ட இந்த நடுகற்களை எடுத்து அனுமன் கோவிலின் எதிரே பாதுகாப்பாக நட்டுவைத்த ஊர் மக்களுக்கு, வரலாற்று ஆய்வுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுப்பணியில் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, மனோகரன், விஜயகுமார், ரவி, ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img