பாரம்பரிய மருத்துவ முறையில் கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டுவந்து விட முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் வசதியால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் கொடும் நோய்களையும் ஒழித்துவிடும் வசதி வாய்த்திருக் கிறது. ஆனாலும் நோயின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோயால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளிலிருந்து காத்துக்கொள்ளவும் பத்தியச்சாப்பாடு, இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா மருத்துவம் என்று அவரவருக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்து உடல் நலனை பேணிக்காத்து கொள்ளும் வாய்ப்பு நிறையவே உள்ளது.
இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றுக்கும் இயற்கை மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. கொரோனாவுக்கு சித்த மருத்துவமே சிறந்த தீர்வு என சித்த மருத்துவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர்.
இப்போது தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சென்னை வியாசர்பாடியில் தொடங்கியுள்ளது. இங்கு சிகிச்சை பெறுவோருக்கு கபசுரக்குடிநீர், தாளிசாதி சூரணம், ஆடாதொடை, மணப்பாகு, கரிசாலைப்பால், மூலிகை உணவுகள் உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும் 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்க உள்ளது தமிழக அரசு.
மின்னல் வேகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இத்தகைய மாற்று முறை சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் சித்த மருத்துவத்தை நாடி நோய் நீக்கம் பெற இது தான் நல்ல வாய்ப்பு.
கொரோனா தொற்றின் மூல ஊற்றாகக் கருதப்படும் சீன நாட்டில் இந்த நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
சித்தா, ஆயுர்வேதா யூனானி, ஹோமியோபதி, யோக சிகிச்சை, பிரணாயம் போன்ற நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் நிச்சயம் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். அதற்கான மையங்களை அமைத்து தரும்போது மக்கள் தைரியமாக அங்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவார்கள்.
புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே இதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.