fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அதிகரித்து வரும் கொரோனா: கொடிசியாவில் கூடுதலாக 650 படுக்கைகள் ஏற்பாடு

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா: கொடிசியாவில் கூடுதலாக 650 படுக்கைகள் ஏற்பாடு

கோவையில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கொடிசியாவில் கூடுதலாக 650 படுக்கைகள் அமைக்கப்பட்டு வரு வதாக சுகாதாராத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாரதியார், வேளாண்மை, காருண்யா ஆகிய பல்கலைக்கழகங்கள், கொடிசியா, தனியார் மண்டபங்கள், தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கொடிசியாவில் மட்டும் 675 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவையில் தொடர்ந்து நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் கோவை கொடிசியாவில் கூடுதலாக 650 படுக்கைகள் அமைக் கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப் பட்டு வருகின்றன.

அதன்படி கொடிசியாவில் ஏற்கெனவே 2 அரங்குகளில் 675 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 2 அரங்குகளில் 650 படுக்கை கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.
40 படுக்கைகள் அதிகரிப்பு:
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 40 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன் தேவைக்காக தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் பலரும் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காததால் அரசு மருத்துவமனையின் வெளியே ஆம்புலன்ஸிலேயே பல மணி நேரம் செவ்வாய்க்கிழமை காத்திருந்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கைகள் புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அ.நிர்மலா தெரிவித்தார். ஏற்கெனவே 800 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 840 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img