சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் பங்கேற்றார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நிச்சயமற்ற சூழல் நிலவும் இந்த தருணத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டறிய மத்திய கல்வித் துறை மற்றும் சிபிஎஸ்இ வாரியம் ஆகியவை இணைந்து கடந்த 3ம் தேதி காணொலி மூலமான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திடீரென பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையா டினார். பிளஸ் 2 தேர்வு குறித்து அவர் எடுத்த முடிவு பற்றி மாணவர்கள் தங்களின் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். நேரலையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 38 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஒருவராக கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் சித்ராகர் தேப்ரக் பங்கேற்று பிரதமர் மோடியுடன் கலந்து ரையாடினார்.
அந்த அனுபவம் குறித்து மாணவன் சித்ராகர் தேப்ரக் கூறுகையில், கலந்துரையாடலில் என்னுடைய முறை வந்தது, அப்போது நான் பிரதமரிடம் பொதுத் தேர்வு ரத்தாகும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். தற்போது என்னுடைய கவனம் முழுவதும் போட்டித் தேர்வுகளை நோக்கியே உள்ளது. அதற்காக நான் என்னை தயார்படுத்தி வருகிறேன் என்று தெரிவித்தேன். மேலும் நீங்கள் இந்த பொதுத் தேர்வை ரத்து செய்தது சரியான முடிவு என்றும் தெரிவித்தேன் என்று கூறினார்.
பொதுத் தேர்வு ரத்து குறித்த பிரதமரின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் டாக்டர் கீதா லட்சு மண் கூறுகையில், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை விட மாணவர்களின் உயிர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாடு முழுவதும் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக, பொதுத் தேர்வு தேதி மற்றும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் உள்ள சிக்கல் மற்றும் அதை ஆசிரியர்கள் திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
எங்கள் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவன் சித்ராகர் தேப்ரக் பிரதமருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றது அவனது வாழ்நாளில் அவனுக்கு கிடைத்த மிகச் சிறந்த அனுபவம் ஆகும். இதற்காக எங்கள் பள்ளி மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு அவனுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இருந்து எங்கள் பள்ளியை தேர்வு செய்து இந்த வாய்ப்பை வழங்கிய சிபிஎஸ்இ தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.