fbpx
Homeபிற செய்திகள்சீனா விரித்த வலையில் சிக்கித் திணறும் இலங்கை!

சீனா விரித்த வலையில் சிக்கித் திணறும் இலங்கை!

உலகையே உலுக்கிய கொரோனா காரணமாக சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பலத்த அடியை சந்தித்துள்ள நிலையில், கடன் சுமை காரணமாக திவாலாகும் நிலையில் இலங்கை உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வரி வசூலும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடனில் மூழ்கிய இலங்கையின் மொத்த உற்பத்தியில் 10 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள சுற்றுலாத்துறையும் கொரோனா காரணமாக முடங்கியுள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் மொத்த கடன் தொகையும் வட்டித் தொகையும் உயர்ந்து வருகிறது. இலங்கையின் மொத்த கடன் மதிப்பு 7.3 பில்லியன் டாலர் அதாவது இலங்கை ரூபாய் மதிப்பில் கடன் தொகை 1.49 லட்சம் கோடியாக உள்ளது.

கடந்த நவம்பர் மாத அளவீட்டின்படி இலங்கை அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு இலங்கை ரூபாய் மதிப்பில் உற்பத்தி 32,462 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்நிய செலாவணியைவிட கடன் தொகை அதிகமாக உள்ளது.

உரத் தட்டுப்பாடு காரணமாக நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 முதல் 40 மூட்டை அறுவடை செய்த இடத்தில் 15 முதல் 20 மூட்டைகள் மட்டுமே தற்போது அறுவடை செய்யப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். ஒரு டீயின் விலை ரூ.70. ஒரு கிலோ கேரட் 560 ரூபாய்க்கும் ஒரு கிலோ மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உணவுப் பொருட்களின் விலைவாசி விண்ணை நோக்கிச் சென்றுள்ளது.
இதனால் வெறும் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவதாக இலங்கை மக்கள் வேதனை கண்ணீர் வடிக்கிறார்கள்.

இலங்கையில் ஏற்கனவே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக உலக வங்கி கணக்கிட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் இந்த நிலைமைக்கு காரணம் அது சீனாவின் கடன் வலையில் சிக்கியதே என பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சீனாவுடன் நெருங்கிய உறவு காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் இலங்கைக்கு இல்லாமல் போனதாகவும் தற்போது நாடு திவாலாகும் நிலையை தடுக்க இந்தியா போன்ற நாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்த சூழலில் நமது பிரதமர் மோடி இலங்கை செல்லவிருக்கிறார். அவரது பயணம் இலங்கையில் புதியதோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா என அந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சீனா தங்களை கட்டுப்படுத்த சூழ்ச்சி செய்கிறதே தவிர, நாட்டின் வளர்ச்சிக்காக உதவ வில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் உண்மையான நட்பு நாடு இந்தியா தான் என இலங்கை அரசும் இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது.

தமிழக மீனவர்களை அவ்வப்போது அந்நாட்டு கடற்படை கொத்திக்குதறினாலும் நம் தொப்புள்கொடி உறவு மக்களும் அங்கே இன்னலுக்கு ஆளாகி உள்ளனரே. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவில் மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

இந்த மாற்றம் இந்திய உதவியுடன் மலரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img