fbpx
Homeதலையங்கம்ஜெ.மரணம் - சசிகலா மீது என்ன நடவடிக்கை?

ஜெ.மரணம் – சசிகலா மீது என்ன நடவடிக்கை?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளது.

இவர்கள் தவிர, ஜெயலலிதாவுக்கு டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம் சிகிச்சை அளித்துள்ளனர்.

அவர்கள் மும்பை, பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்` என்றும் ஆணையம் குறிப்பிடுகிறது.

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோர் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா, அப்படி முடிவு செய்தால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியுமா? நடவடிக்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

உண்மை கண்டறிவதற்காக அமைக்கப்படும் ஒரு விசாரணை அமைப்பின் அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்க மறுக்கலாம். அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை.

ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ள நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசாணையை உடனடியாக வெளியிட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க அரசு தயாராகி விட்டது என்பதையே இது காட்டுகிறது.

முதல்வரின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுப்பது பற்றி தொடர்புடைய துறைகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும். அனேகமாக சிபிசிஐடிக்கு விசாரணை நடத்த உத்தரவிடலாம்.

அவர்கள் வழக்குப் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களின் அலட்சியம், நோக்கம் ஆகியவை குறித்த விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். தேவைப்பட்டால் கைதுகூட செய்யலாம்.

தற்போது அறிக்கை வெளியாகிவிட்ட நிலையில் அரசு தயக்கம் காட்டினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரை தான் செய்யப்பட்டுள்ளதே தவிர, உத்தரவிடவில்லை.

அதனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடர மாட்டார்கள். அப்படியே வழக்குத் தொடரும் பட்சத்தில் நீதிமன்றங்கள் அதை ஏற்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்,

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.
எது எப்படியோ, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததில் பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

அவரது உயிரோடு விளையாடி இருக்கிறார்கள். தமிழக அரசு எடுக்கப்போகும் மேல்நடவடிக்கைகள் மூலம் அது அம்பலத்துக்கு வரும்.

உண்மைகளை நீண்டகாலத்துக்கு மறைக்க முடியாது என்பதே உண்மை!

படிக்க வேண்டும்

spot_img