கொரோனா 2வது அலை இந்தியாவில் தனது கோர ஆட்டத்தை துவங்கி விட்டது. தினசரி பெருந்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் கையை மீறி போய்க் கொண்டிருக்கிறது.
மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவீர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க தகன மேடை இல்லாத நிலை இப்படி நாடு முழுவதும் அவலக்குரல்கள் கேட்டு வருவது மனதில் மிகப்பெரிய சுமையாக ஏறியிருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்திருப்பது மிகவும் ஆறுதல் தருவதாக இருக்கிறது.
சென்ற ஆண்டு கொரோனா முதல் அலையின் போது அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி கொத்து கொத்தாக உயிர்களை பறி கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் தேவை அறிந்து இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
அன்று நாம் செய்த உதவியை மறக்காத நாடுகள் இன்று இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவ முன்வந்திருப்பதை நினைக்கும் போது தர்மம் தலைகாக்கும் என்றும், நன்றி மறத்தல் நன்றன்று என்றும் நம் முன்னோர்கள் சொல்லியது எத்துணை சாத்தியமான வார்த்தைகள் என்பது புரியும்.
இந்தியாவுக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்கள், மருத்துவ ஆக்சிஜன் நிரப்பு கருவிகள் கொரோனா தடுப்பூசிகள், உயிர் காக்கும் கருவிகள் போன்றவற்றை வழங்க அமெரிக்காவின் சுமார் 40 நிறுவனங்கள் இணைந்து செயற்குழுவை உருவாக்கியுள்ளன.
கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர்பிச்சை ரூ.135 கோடி நிதியுதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் சத்ய நாதெள்ளாவும் உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பேட்கம்மின்ஸ் 50000 டாலர்களும், பிரெட்லீ ரூ.40 லட்சமும் வழங்க முன்வந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடியிடம் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பணக்கார தொழிலதிபர்களும், பிரபலங்களும் இந்த தருணத்தில் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்தால், பல லட்சம் மக்களின் உயிர்களை மீட்டெடுக்க முடியும்.
மாஸ்க், சானிடைசர், பிபிடி கிட்டுகள், திரவ சோப்புகள், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன்கள் என்று இப்போதைய அத்தியாவசிய தேவையான மருந்து பொருட்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், பொருளுதவி செய்ய அவர்கள் முன் வர வேண்டும்.
சாமானிய மக்களுக்கு இவற்றை இலவசமாக வழங்க ஆவன செய்ய வேண்டும்.