fbpx
Homeபிற செய்திகள்தாட்கோ துறை மூலம் 107 பேருக்கு ரூ.143.89 கோடி மானியக் கடனுதவி நீலகிரி மாவட்ட...

தாட்கோ துறை மூலம் 107 பேருக்கு ரூ.143.89 கோடி மானியக் கடனுதவி நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ துறையின் மூலம் 11.03.2022 வரை 107 பயனாளிகளுக்கு ரூ.143.89 கோடி மதிப்பில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வராக பதவியேற்ற நாள் முதல் பல திட்டங்களை அறிவித்து வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். பணிக்கு செல்லும் மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிட இனமக்களின் வாழ்க்கை தரத்தை, சமுதாய பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் மூலம் உயர்த்துதல் அரசின் குறிக்கோளாகும். திட்டத்தொகையின் உச்சவரம்பு மற்றும் வழக்கமான நலிந்த பிரிவினருக்கென சில குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே நிதியுதவி, கடந்த சில வருடங்களாக அதிகப்படுத்திய மானியத் தொகை, பொருளாதார மேம்பாடு என்ற ஒரு நிலையினை உறுதிப்படுத்தக் கூடிய முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட தொழில்கள் என புதிய கோணத்தில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

என்னென்ன திட்டங்கள்?
நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ துறையின் மூலம் 2021-&2022ம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மக்களுக்காக நில மேம்பாட்டுத்திட்டம், துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம் (கிளினிக்) மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மானியம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி திட்டம், நல நிதி திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தாட்கோ துறையின் மூலம் 2021-2022 ஆண்டுக்கு நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ.4.75 இலட்சமும், நிலம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.11.09 இலட்சமும், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 61 நபர்களுக்கு ரூ.50.84 இலட்சமும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 38 நபர்களுக்கு ரூ.39.77 இலட்சமும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் (கிளினிக்) 4 நபர்களுக்கு ரூ.7.92 இலட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்கான சுழல்நிதி மானியம் 16 சுய உதவிக்குழுக்களில் 156 மகளிருக்கு ரூ.31.69 இலட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 07.05.2021 முதல் 11.03.2022 அன்று வரை 107 பயனாளிகளுக்கு ரூ.143.89 கோடி மதிப்பில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
‘வாகனம் வாங்கினேன்

வாடகையும் கிடைக்கிறது’
பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டம் – இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி சுபாஷ் கொய்த்தன் கூறியதாவது:
அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லிமலை பகுதியில் வசித்து வருகிறேன். நான் தனிநபர் ஒருவரிடம் வாகனம் ஓட்டுபவராக பணிபுரிந்து வந்தேன். சுயமாக தொழில் தொடங்குவதற்காக பிறரிடம் கடனுதவி கேட்டேன். ஆனால் எனக்கு யாரும் கடன் உதவி செய்ய முன் வரவில்லை. தாட்கோ மூலம் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டம் – இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், வாகனம் வாங்க கடனுதவி வழங்கப்படுவது குறித்து நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். உடனடியாக தாட்கோ அலுவலகத்தை அணுகி வாகனம் வாங்குவதற்காக கடனுதவி கேட்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் அரசு விதிகளுக்கு உட்பட்டிருந்த காரணத்தினால், எனக்கு சுற்றுலா வாகனம் வாங்குவதற்கு ஏதுவாக ரூ.3.75 இலட்சம், தாட்கோ மானியத்துடன், ரூ.3.87 இலட்சம் வங்கிக் கடனுதவியும் வழங்கப்பட்டது. எனது கையில் இருந்த தொகையையும் சேர்த்து அதன் மூலம் சுற்றுலா வாகனம் வாங்கி, தற்பொழுது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதால், தினந்தோறும் நல்ல வாடகை கிடைக்கிறது. இதன் மூலம் வங்கிக்கடன் மாதத் தவணை சரியான முறையில் செலுத்தி வர முடிகிறது. குடும்ப செலவினையும் சிரமமின்றி மேற்கொள்ள முடிகிறது. இந்த வாகனத்தின் மூலம் எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி தந்த தமிழக அரசிற்கும் முதல்வருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மானியம், வங்கிக் கடன் பெற்றோம் வியாபாரத்தால் குழு வாழ்கிறது’
தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் பயனடைந்த சிவசக்தி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மஞ்சுளா கூறியதாவது:
உதகை மேல் தலையாட்டி மந்து பகுதியில் வசித்து வருகிறோம். சிவசக்தி மகளிர் சுய உதவிக்குழு என்ற ஒரு குழு வைத்துள்ளோம். எங்கள் குழுவில் 10 பேர் உள்ளனர். தொழில் தொடங்குவதற்காக தாட்கோ மூலம் ரூ.5.08 இலட்சம் கடன் பெற்றுள்ளோம். இதில் ரூ.2.50 இலட்சம் மானியமாகவும், ரூ.2.58 இலட்சம் வங்கிக்கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையினை பெற்று நாங்கள் அரிசி மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து வங்கிக்கடன் மாதத் தவணையை சரியான முறையில் செலுத்தி வருவதோடு, எங்களது குடும்ப செலவினையும் சிரமமின்றி மேற்கொள்ள முடிகிறது. பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவருக்கு எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான தொழில்முனைவோர் திட்டத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்; (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img