fbpx
Homeதலையங்கம்தூத்துக்குடி துப்பாக்கிசூடு: இ.பி.எஸ். உண்மை முகம்!

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: இ.பி.எஸ். உண்மை முகம்!

தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் சுருக்கம்:- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில், குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகளை போலீசார் பயன்படுத்தியது உடற்கூறு ஆய்வில் தெரியவருகிறது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பின்னந்தலை வழியாகக் குண்டு துளைத்து, முன் தலை வழியாக வெளியேறியுள்ளது.

சிலருக்கு முதுகின் பின்பகுதியில் குண்டு துளைத்து, இதயம் போன்ற முக்கிய பகுதியைச் சிதைத்து மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்யவில்லை.

காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் போராட்டக்காரர்களைப் பார்த்து சுட்டுள்ளார். இவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது.
போராட்டத்தின் போது எந்த காவலரும் படுகாயம் அடையவில்லை.

போலீசார் மறைந்திருந்து பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போதைய மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் சங்கத்தை சந்தித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டாமென கோரிக்கை வைக்கலாமென முதல்வர் பழனிசாமியிடம் அதிகாரிகளால் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தவிர போராட்டத்தின்போது, அப்போதைய தலைமை செயலர் கிரிஜா, டி.ஜி.பி, உளவுத்துறை அனைத்து விபரங்களையும் தெரிவித்தும் பழனிசாமி நடவடிக்கை எடுக்காதது வியப்பை தருகிறது. இவ்வாறு ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சம்பவம் நடந்தபோது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்த துப்பாக்கி சூட்டை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டதாக கூறியிருந்தார். ஆனால் ஆணையத்தின் விசாரணையில் எடப்பாடி பொய் கூறியது அப்பட்டமாக அம்பலமாகி இருக்கிறது.

இந்த அறிக்கை மீதான சட்டப்பேரவை விவாதத்தில் நேற்று பேசிய அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஆவேசப்பட்டனர்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

இவ்வாறாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம், தமிழக மக்களுக்கு தோலுரித்து காட்டப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் தன் கடமையை திட்டமிட்டே செய்யத்தவறியதன் பின்னணி என்ன?. அந்த புதிருக்கான விடை எங்கே மறைந்திருக்கிறது? யார் யாரெல்லாம் எப்படித் தண்டிக்கப்படுவார்கள்? தண்டனை எப்படியிருக்கும்?

குற்றவாளிகளை விரைவாக சட்டத்தின்முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img