fbpx
Homeதலையங்கம்தேர்வு முறைகேடுகள் இனியாவது குறையுமா?

தேர்வு முறைகேடுகள் இனியாவது குறையுமா?

நாடு முழுவதும் அரசு தேர்வுகளில் வினாத்தாள் அவுட் ஆவது, ஒருசில தேர்வு மையங்களில் காப்பியடிக்க அனுமதிப்பது… இப்படிப்பட்ட முறைகேடுகள் ஆண்டுதோறும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.

நீட் தேர்வில் முறைகேடு, பல்கலைக்கழக தேர்வுகளில் தில்லுமுல்லு, பள்ளித் தேர்வுக்கான வினாக்கள் கசிவது தொடர் கதையாக மாறி வருகிறது.

இப்படியெல்லாம் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தற்போது விதிக்கக்கூடிய தண்டனை போதாது. தண்டனை குறைவாக இருப்பதால் தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முறைகேடுகளை கருப்பு ஆடுகள் அரங்கேற்றுகின்றன,

நன்றாக படிக்கும் மாணவர்களை விட, வகுப்பில் மிகமிக பின்தங்கிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் அவல நிலை நடந்து வருகிறது.

இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க பாலியல் குற்றங்களைத் தடுக்க கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டம் போல கடும் சட்டம் கொண்டு வருவதே தீர்வாக அமையும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது? இதோ ராஜஸ்தான் மாநிலம் அதைச் செய்து விட்டது. அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் மசோதாவை ராஜஸ்தான் அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.

ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட பெரும் பிரச்சனைக்கு பிறகு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் பொதுத் தேர்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவுசெய்யப்பட்ட, நகலெடுக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் என்று மசோதா கூறுகிறது.

மசோதா நிறைவேறி சட்டமானதும் இந்த பிரச்சினைக்கு ராஜஸ்தான் மாநிலம் முற்றுப்புள்ளி வைத்துவிடுவது திண்ணம்.

இதனைப் போலவே பிற மாநில அரசுகளும் கடுமையான தண்டனை தரும் சட்டங்களை இயற்றலாமே!

படிக்க வேண்டும்

spot_img