fbpx
Homeதலையங்கம்‘நீட்’ தற்கொலைகளுக்கு முடிவு கட்டப்படுமா?

‘நீட்’ தற்கொலைகளுக்கு முடிவு கட்டப்படுமா?

தமிழக ஆளுனநரால் திருப்பி அனுப்பப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரவு, தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டு, இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது.

ஆனால், அந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

ஒரு சட்ட முன்வரைவை சட்டப்பேரவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.

இதை உணர்ந்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் நீட் சட்ட மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு எப்போது அனுப்புவார் என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

அதே போல் குடியரசுத் தலைவர் அந்த தீர்மானத்தின் மீது தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கமுடியாது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடமும், சுகாதாரத்துறையிடமும் இதுகுறித்து கருத்துகளை கேட்பார்.

அவர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பினை சுட்டிக்காட்டி, இந்த தீர்மானத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவே அதிகம் வாய்ப்புள்ளது.

அப்படி மத்திய அரசு இந்த தீர்மானத்தின் மீது தங்கள் எதிர்ப்பை முன்வைத்தால், குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

சிலநேரம் மத்திய அரசு தனக்கு அளித்த கருத்துக்களை முன்வைத்து குடியரசுத் தலைவர் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு விளக்கம் கேட்கலாம், அந்த விளக்கத்தை மத்திய அரசுக்கும் அளித்து மீண்டும் இந்த தீர்மானத்தின் மீது புதிய கருத்துக்களை கேட்கலாம்.

எப்படி இருந்தாலும் குடியரசுத் தலைவர் மட்டுமே இந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவை எடுக்க முடியாது. ஆளுநரின் அதிகாரம் என்பதை தாண்டி ஒரு மாநில அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தம் அதன் சட்டப்பிரிவை பொறுத்த செயல்பாட்டிற்கு வர குடியரசுத் தலைவரின் இசைவும், மத்திய அரசின் ஒப்புதலும் பின்புலமாக இருக்கவேண்டியுள்ளது.

நீட் விவகாரத்தில் மத்திய அரசின் பங்கும் இருக்கிறது. இதனாலேயே ஏற்கனவே அ.தி.மு,க ஆட்சியில் நீட்டிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற இயலாமல் போனதற்கு காரணம். அதே நிலையே இப்போது ஏற்படும் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.

கடந்த இரு ஆண்டுகளாக, நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் ஒவ்வொரு ஆண்டும் 10 பேருக்கும் மேலாக தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டும் நீட் தற்கொலைகள் தொடர் கதையாகி விடக்கூடாது. அதனைத் தடுக்க ஒரே வழி என்ன? தமிழக ஆளுநர் உடனடியாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து வழிவிட வேண்டும்.

வருமாண்டிலாவது மாணவர்களின் தற்கொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டாமா?

படிக்க வேண்டும்

spot_img