fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டத்தில் 600 மகளிருக்கு திருமண நிதியுதவி ரூ.2,32,50,000 4.8 கிலோ தங்கம்

நீலகிரி மாவட்டத்தில் 600 மகளிருக்கு திருமண நிதியுதவி ரூ.2,32,50,000 4.8 கிலோ தங்கம்

நீலகிரி மாவட்டத்தில், 2021-2022- நிதியாண்டிற்கு பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு பயின்ற ஒரு பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.50,000/- வீதமும், 330 பயனாளிகளுக்கும், பத்தாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு பயின்ற ஒரு பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.25,000/- வீதம் 270 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ.2,32,50,000/- நிதியுதவி மற்றும் 4.8 கிலோ கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் பெண்களின் நலன் கருதி பல திட்டங்களை அறிவித்து வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

பணிக்கு செல்லும் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது.

முதல்வரின் ஆணைக்கிணங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் பல்வேறு திட்டங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படுகின்றன.

செலவினங்களை குறைக்க

பெரும்பாலான சமூகங்களில் திருமணத்தின்போது, தங்கத் திருமாங்கல்யம் அணிவது ஒரு பழக்கமான கலாச்சாரமாகும். பெற்றோர்கள் தங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார பின்னணியில் திருமண நிகழ்வுகளை கொண்டாடுகிறார்கள்.

இருப்பினும் பொருளாதார ரீதியில் அடிதட்டு பிரிவுகளிலிருக்கும் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் திருமணத்திற்கு செலவினங்களை சுமக்க முடியாது.

அத்தகைய பெற்றோருக்கு உதவுவதற்கும், அவர்களின் மகள்களுக்கு சரியான வயது வரை கல்வி கற்பதற்கும், திருமண உதவித் திட்டங்கள் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற மகள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு
மேற்படி திட்டங்களின் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெறுபவர்கள் குடும்பங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்ணிற்கு ரூ.50,000/-ம் மற்றும் பட்டப்படிப்பு அல்லாதோருக்கு (பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயின்றோர்) ரூ.25,000/-ம் திருமண நிதியுதவியாகவும் அதனுடன் 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

2021-2022ம் ஆண்டிற்கு பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு பயின்ற ஒரு பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.50,000/- வீதம் 330 பயனாளிகளுக்கு ரூ.1,65,00,000/-ம் மற்றும் பத்தாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு பயின்ற ஒரு பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.25,000/- வீதம் 270 பயனாளிகளுக்கு ரூ.67,50,000/-ம் ஆக மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ.2,32,50,000/- நிதியுதவி மற்றும் 4.8 கிலோ கிராம் தங்கம் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரியில் துவக்கம்
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் இத்திட்டத்தை 13.01.2022 அன்று துவக்கி வைத்தார்.

உதகை வட்டத்தைச் சேர்ந்த 85 பட்டதாரிகளுக்கும், 36 பட்டதாரி அல்லாதோருக்கும் குன்னூர் வட்டத்தைச் சேர்ந்த 81 பட்டதாரிகளுக்கும், 28 பட்டதாரி அல்லாதோருக்கும், கோத்தகிரி வட்டத்தை சேர்ந்த 49 பட்டதாரிகளுக்கும், 27 பட்டதாரி அல்லாதோருக்கும், கூடலூர் வட்டத்தை சேர்ந்த 115 பட்டதாரிகளுக்கும், 179 பட்டதாரி அல்லாதோருக்கும் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு (330 பட்டதாரிகள், 270 பட்டதாரி அல்லாதவர்கள்) 4.8 கிலோ கிராம் தங்க நாணயங்கள் (தலா 8 கிராம்) வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திருமண நிதியுதவியாக தலா ரூ.50,000/- வீதம் 330 பயனாளிகளுக்கு ரூ.1,65,00,000/-ம் மற்றும் பத்தாம் வகுப்பு/ பனிரெண்டாம் வகுப்பு பயின்ற 270 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.25,000/- வீதம் ரூ.67,50,000/-ம் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கிடைத்தது தங்கம் நடந்தது திருமணம்
தாலிக்கு தங்கம் பெற்ற பயனாளி கூறியதாவது:
என் பெயர் மணிமேகலை. நாங்கள் குன்னூர் டேன்டீ பகுதியில் வசித்து வருகிறோம். எனக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நான் கூலி வேலை செய்து தான் என் குழந்தைகளை படிக்க வைத்தேன்.

என் மகள் பெயர் நந்தினி. என் மகளுக்கு திருமண வயதாகி விட்டது. ஆனால் என்னால் என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க போதிய நிதி வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.

அச்சமயம் சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுவதாக அறிந்தேன். உடனடியாக சமூக நலத்துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்தேன்.

என் மகள் பட்டப்படிப்பு படித்துள்ள காரணத்தினால் என் மகளின் திருமணத்திற்கு ரூ.50,000/- நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் கிடைத்தது.

அதன் மூலம் எனது மகளின் திருமணத்தை சிறந்த முறையில் நடத்தினேன். என் மகளின் திருமணத்திற்கு உதவி செய்து, வாழ்க்கைக்கு வழிகாட்டிய முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை நானும் என் குடும்பத்தாரும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

துன்பம் விலகியது சந்தோஷம் வந்தது
தாலிக்கு தங்கம் பெற்ற பயனாளி கூறியதாவது:
என் பெயர் பிரேமா. நாங்கள் குன்னூர் உபதலை பகுதியில் வசித்து வருகிறோம். நானும் எனது கணவரும் விவசாயம் செய்து அதன் மூலம் வருமானத்தை கொண்டு தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம்.

எனக்கு இரண்டு பெண்கள் குழந்தைகள் உள்ளனர். ஒரு மகள் பள்ளியில் படித்து வருகிறாள். மற்றொரு மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு தனியார் துறையில் பணி செய்து வருகிறாள். அவளுக்கு திருமணம் செய்ய வசதியில்லாமல் மிகவும் துன்பப்பட்டு வந்தோம்.

அச்சமயத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவி மட்டும் தாலிக்கு தங்கம் தருவதாக அறிந்தேன். உடனடியாக சமூக நலத்துறை அலுவலரை சந்தித்து விண்ணப்பித்தேன்.

எனது மகளின் திருமணத்திற்கு ரூ.25,000/-ம் நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கமும் கிடைத்தது. அதன் மூலம் என்மகளின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தோம்.

என் மகளின் திருமணத்திற்கு உதவி செய்த முதல்வருக்கு மிகுந்த நன்றியை தெரிவிப்பதோடு வாழ்நாள் முழுவதும் நானும் என் குடும்பத்தினரும் நன்றி கடன்பட்டிருக்கிறோம் என்றார்.

பெண்களுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img