fbpx
Homeபிற செய்திகள்நொய்டாவில் டிசம்பர் மாதம் இந்தியா ஐடிஎம்இ -2022 உயர் தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சி

நொய்டாவில் டிசம்பர் மாதம் இந்தியா ஐடிஎம்இ -2022 உயர் தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சி

ஜவுளித்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீனபோக்கை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில், வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை லாப நோக்கமில்லாத அமைப்பான இந்திய ஐடிஎம்இ அமைப்பு உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ‘இந்திய ஐடிஎம்இ காண்காட்சி’யை இந்திய எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இந்த ஐடிஎம்இ சொசைட்டியின் தலைவர் எஸ்.ஹரிசங்கர் கூறியதாவது: 6 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், ஸ்லோவாக்கியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான் மற்றும் இந்தியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 1100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1,50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள்.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த காண் காட்சியில் 22 பிரிவுகளில் 1100க்கும் மேற்பட்ட எந்திரங்களை காட்சிப்படுத்துவதற்கும், முகவர்கள், டீலர்கள், அரசு அதிகாரிகள் ஒரே இடத்தில் சந்திப்பதற்கும் இந்த காண்காட்சி ஏதுவாக இருக்கும்.

மேலும், இது தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதும் ஜவுளி மற்றும் ஜவுளி எந்திரங்கள் துறையில் வணிகத்திலிருந்து வணி கத்திற்கான உச்சபட்ச நிகழ்வாக இருக்கும். இந்திய ஐடிஎம் அமைப்பு 43 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் வெளிப் படையான, உண்மையான மற்றும் வெளிப்படை தன்மையுடன் சேவையாற்றி வருகிறது.

இந்த நிலையில் இந்த கண்காட்சி சர்வதேச அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு சிறந்ததளமாக அமைவதோடு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

மேலும் கல்வி மற்றும் அறிவுப் பரவலை ஊக்குவிக்கும் விதமாக இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களை இந்த அமைப்புடன் இலவசமாகப் பதிவு செய்து இந்த பிரமாண்ட கண்காட்சியின் நேரடி அனுபவத்தைப் பெறுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

இந்திய ஐடிஎம்இ 2022 நிகழ்வு இந்தியாவின் பிராந்திய ஜவுளி மையங்களான பிவாண்டி, இச்சல்கரஞ்சி, பரிதாபாத், வாபி, உமர்கான், பானிபட், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், மதுரை, சில்வாசா, குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் பல்வேறு இடங்களில் ஜவுளி வணிகத்திற்காக வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் ஜவுளித்துறையின் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஐடிஎம்இ பொருளாளர் கேத்தன் சாங்வி உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img