fbpx
Homeபிற செய்திகள்பதிவுத் தபாலுக்கு இன்று 174-வது பிறந்த நாள்

பதிவுத் தபாலுக்கு இன்று 174-வது பிறந்த நாள்

தபால் துறையில், பதிவு அஞ்சல் சேவை (Regd. Post) இன்று (நவ.1) தனது 174-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

பிரிட்டிஷ் அரசு 1849-ம் ஆண்டு, பிரிட்டிஷ் தபால் அமைப்பு (British Postal System) என்ற பெயரில் பதிவுத் தபால் சேவையை துவங்கியது. இச்சேவையை கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேயர்களிடம் இருந்து அனுமதி பெற்று இந்தியாவில் செய்து வந்தது.

அதன்பின்னர் 1854-ம் ஆண்டு தபால் அலுவலக சட்டம் (Post Office Act) உருவாக்கப்பட்டு, இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இயங்கத் துவங்கியது. பாதுகாப்பாக தபால்களை சேர்ப்பதற்காக அன்று துவங்கப்பட்ட பதிவுத் தபால் சேவை இப்போது 174-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

அப்போதைய கால கட்டத்தில், தகவல்களை பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் கொண்டு சேர்ப்பதற்கு தபால் துறை திறம்பட இயங்கியது. அந்த நம்பிக்கை இன்றளவும் தொடர்கிறது என்றால் அது எவ்வளவு ஆழமாக தொன்றுதொட்டு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.

இப்போது எண்ணற்ற தனியார் சேவைகள் தபால்களை கொண்டு சேர்ப்பதற்கு செயல்பட்டாலும், இன்றும் அரசு சார்பில் அனுப்பப்படும் தபால்கள், நீதிமன்றங்கள், வங்கிகளின் தகவல்கள் என பலவும் பதிவுத் தபால் வழியாக அனுப்பப்படுகின்றன.

சாதாரண தபால் சேவை மட்டுமே இருந்த காலத்தில், முக்கிய தபால்கள் பாதுகாப்பாக அனுப்புவதில் சில சிரமங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாகவே 1849-ம் ஆண்டு, நவ.1-ம் தேதி பதிவுத் தபால் சேவையை அன்றைய ஆங்கிலேயர்கள் அமல்படுத்தினர்.

அதிக நம்பிக்கை குறைந்த கட்டணம்
இது குறித்து முன்னாள் தபால் துறை அதிகாரியும் மேக்தூத் விருது பெற்றவருமான கோவையைச் சேர்ந்த நா.ஹரிஹரன் தெரிவித்ததாவது:

நம்பிக்கை, உத்தரவாதம், பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் பதிவுத் தபால் சேவை மக்களின் மனதை ஆக்கிரமித்தது. முக்கிய ஆவணங்கள் பதிவுத் தபால் வழியாகவே அனுப்பப்பட்டன. அனுப்பிய தபால்களுக்கு ரசீதும் கொடுக்கப்பட்டன.

தற்போது இது மேலும் மெருகூட்டப்பட்டு, தபால் எங்கு எந்த நேரத்தில் பயணிக்கிறது போன்ற தகவல்களுடன் டிராக்கிங் எண் மூலம் அறியும் வசதி தரப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் தற்போது ரூ.22 மதிப்பில் 20 கிராம் எடை கொண்ட பதிவுத் தபால்கள் அனுப்பலாம். ஒவ்வொரு கூடுதல் 20 கிராம் எடைக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள தபால் அலுவலகத்தில், கோர்ட் நோட்டீஸ் உள்ளிட்ட சுமார் 500 பதிவுத் தபால்கள் தினசரி கையாளப்படுகின்றன.
சுதந்திர இந்தியாவில் தபால்துறை, பட்டிதொட்டியெங்கும் தங்களது எல்லையை மேலும் விரிவுபடுத்தி சேவை செய்யத் துவங்கியது.

1986-ம் ஆண்டு ‘ஸ்பீட் போஸ்ட்’ (Speed Post) எனும் விரைவுத் தபால் சேவையை அறிமுகம் செய்தது. அப்போது டில்லி, மும்பை, சென்னை உள்பட 7 நகரங்களில் இச்சேவை துவங்கியது.

1987-ம் ஆண்டு இச்சேவை கோவையில் அறிமுகமானது.
வார்த்தையிலேயே விரைவு உள்ளதால், பதிவுத் தபால்கள் தாமதமாகப் போகுமா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.

அந்த அச்சம் தவறு. விரைவுத் தபாலுக்கும் பதிவுத் தபாலுக்கும் சில விதிமுறைகள் உண்டு. விரைவுத் தபால் குறிப்பிட்ட விலாசத்தில் சேர்க்கப்படும். அங்கு அதை யார் வேண்டுமானா லும் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் பதிவுத் தபால் என்பது விலாசத்தில் குறிப்பிட்டுள்ள நபரிடம் மட்டுமே கொடுக்கப்படும். அந்நபர் இல்லாதபட்சத்தில் அவரால் சுட்டிக்காட்டப்பட்ட நபரிடம் வழங்கப்படும். இது தபால் சரியான நபருக்கு போய் சேருகிறது என்பதை உறுதிப்படுத்தவே. இதுவே வித்தியாசம்.

பதிவுத் தபால் பெற வேண்டியவர் வீட்டில் இல்லை என்றால், தொடர்ந்து 7 நாட்களுக்கு அவரது வீட்டுக்கு தபால் கொண்டு செல்லப்படும். அதன்பின்னும் சம்பந்தப்பட்டவர் இல்லையென்றால் தகவல் தெரிவிக்கப்பட்டு, தபால் நிலையத்தில் மேலும் 7 நாள் பாதுகாக்கப்படும்.

அதன்பின் யாரும் உரிமை கோரவில்லை என்றால் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும். விரைவுத் தபால் பெற விலாசத்தில் யாரும் இல்லையென்றால், தொடர்ந்து 3 நாட்களுக்கு கொண்டு செல்லப்படும்.

பின்னர் குறிப்பிட்ட படிவத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைவுத் தபாலில் உள்ள விலாசத்தில் சேர்க்கப்படும். இப்போதும் பதிவுத் தபால்களை அனுப்பவே அனை வரும் விரும்புகின்றனர். இவ்வாறு நா.ஹரிஹரன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் நகைச்சுவை
இந்தியாவில் தபால் அமைப்பு உருவான 150-வது ஆண்டு விழாவை கடந்த 2004-ம் ஆண்டு இந்திய தபால் துறை கொண்டாடியது.

அவ்விழாவில் பங்கேற்ற அப்போதைய மத்திய தபால், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், ஒரே இந்தியா, ஒரே ஸ்பீட் போஸ்ட் (One India, One Speed Post) சேவையைத் துவங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில் தபால்களை அனுப்பும் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த காலத்தில் தபால் துறையில் இருந்த விற்பனைக் ‘கவர்’ அளவு ‘நீள் செவ்வகத்தில்’ மாற்றி அமைக்கப்பட்டு, அறிமுகம் செய்தார் அமைச்சர்.

அப்போது, ‘சின்னதாக இருந்த கவரை 150 ஆண்டு கழித்து இப்போது நீட்டிட்டீங்க’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img