fbpx
Homeதலையங்கம்பல்கலைக்கழகங்களின் உரிமைகளைப் பறிப்பதா?

பல்கலைக்கழகங்களின் உரிமைகளைப் பறிப்பதா?

இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கட்டாய பொது நுழைவுத் தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தேர்வை இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்த தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்டிருக்கும். புதிய கல்விக் கொள்கையின் கீழ் எல்லா மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதாவது, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு எந்த மதிப்பும் இந்த மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கையில் தரப்படாது. அதாவது பொது நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.

இந்த சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் எந்த வகையிலும் பயன்படாது என்பதால் இது தமிழ்நாட்டில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த பொது நுழைவுத் தேர்வு என்பது ஒரு மோசமான மத்திய மயமாக்கும் நடைமுறை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்தியா என்பது பல மொழிகள், பல மாநிலங்கள் கொண்டது. 13 மொழிகளில் இந்த தேர்வு நடை பெற்றாலும், 12 ஆண்டுகள் மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒருவர், எப்படி மத்திய பல்கலைக்கழகத்தில் சிபிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியும்? அடிப்படையிலேயே இந்த முறை தவறானது அல்லவா?

இன்னுமோர் அதிர்ச்சியூட்டும் செய்தி: இனிமேல் ஆராய்ச்சி மாணவர்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யாமல், பல்கலைக்கழக மானியக் குழு தான் தேர்வு செய்யுமாம். இதன்மூலம் பல்கலைக்கழகங்களின் சுதந்திரம், உரிமை பறிக்கப்படுகிறது என்பது தானே அர்த்தம்?

மத்திய அரசின் இந்த முயற்சியைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? ஏதாவது செய்து தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அனைத்துக் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து எதிர்ப்புக் குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும்.

நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலம் இருண்டு விடாமல் தடுத்தே ஆக வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img