fbpx
Homeபிற செய்திகள்‘புதுமைப்‌ பெண்’ திட்டத்தில் 3276 பேருக்கு அனுமதி

‘புதுமைப்‌ பெண்’ திட்டத்தில் 3276 பேருக்கு அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 3,276 மாணவிகளில், ‘புதுமைப்‌ பெண்’ திட்டத்தில் முதற்கட்டமாக 678 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை ரூ.1000 பெறும் பொருட்டு வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ 5.9.2022 அன்று சென்னையில், சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை சார்பில்,‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1000/- வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ ‘புதுமைப்‌ பெண்’ திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்‌ மூலம்‌, பெண்களுக்கு உயர்‌ கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்‌, குழந்தை திருமணத்தைத்‌ தடுத்தல்‌, குடும்பச்‌ சூழ்நிலை மற்றும்‌ வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்‌, பெண்‌ குழந்தைகளின் இடைநிற்றல்‌ விகிதத்தை குறைத்தல்‌, பெண்‌ குழந் தைகளின்‌ விருப்பத்‌ தேர்வுகளின்படி அவர்களின்‌ மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்‌, உயர்‌ கல்வியினால்‌ பெண்களின்‌ திறமையை ஊக்கப் படுத்தி அனைத்துத்‌ துறைகளிலும்‌ பங்கேற்கச்‌ செய்தல்‌, உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பெண்களுக்கான தொழில்‌ வாய்ப்புகளை அதிகரித்தல்‌, பெண்களின்‌ சமூக மற்றும்‌ பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறும்‌ மாணவிகள்‌ 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும். மாணவிகள் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்த விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 14417-ல் விவரம் அறியலாம்.

கல்லூரியில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்திற்காக புதிய இணையதளம் http://penkalvi.tn.gov.in வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌, சான்றிதழ்‌ படிப்பு, இளங்கலைப்‌ பட்டம்‌, தொழில் சார்ந்த படிப்பு மற்றும்‌ பாரா மெடிக்கல்‌ படிப்பு போன்ற படிப்புகளை பயிலும்‌ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்‌.

தகுதியுடைய மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் முதல் பட்டப்படிப்பினை முடிக்கும்வரை மாதந்தோறும் மாணவிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 நேரடியாக பற்றுவைக்கப்படும்.

முதலாம்‌ ஆண்டிலிருந்து இரண்டாம்‌ ஆண்டு செல்லும்‌ மாணவியரும்‌, இரண்டாம்‌ ஆண்டிலிருந்து மூன்றாம்‌ ஆண்டு செல்லும்‌ இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவியர்களும்‌, தொழிற்கல்வியைப்‌ பொறுத்தமட்டில்‌, மூன்றாம்‌ ஆண்டிலிருந்து நான்காம்‌ ஆண்டிற்குச்‌ செல்லும்‌ மாணவிகளுக்கும்‌, மருத்துவக்‌ கல்வியைப்‌ பொறுத்தமட்டில்‌, நான்காம்‌ ஆண்டிலிருந்து ஐந்தாம்‌ ஆண்டு செல்லும்‌ மாணவியர்களும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைவர்‌.

முதற்கட்டமாக 67,000 கல்லூரி மாணவிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சென்னையில்‌, 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம்‌ மற்றும்‌ நிதிக்கல்வி புத்தகம்‌ அடங்கிய ‘புதுமைப்‌ பெண்’ பெட்டகப்பை மற்றும்‌ வங்கி பற்று அட்டை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்‌.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 5.9.2022 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 3,276 மாணவிகளில் முதற்கட்டமாக 678 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை ரூ.1000/- பெறும் பொருட்டு வங்கி பற்று அட்டை(Bank Debit Card)வழங்கினார்.

இரண்டாம் கட்டமாக 1,161 மாணவிகளுக்கும், மூன்றாம் கட்ட மாக 688 மாணவிகளுக்கும் என மொத்தம் 2,527 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

“உயர்கல்வி படிப்பேன்”
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், சிவகிரி பேரூராட்சி, கருக்கம்பாளையம் பகுதி கல்லூரி மாணவி எஸ்.புனிதா தெரிவித்ததாவது:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அக்கா, தம்பி உள்ளனர்.

அக்காவிற்கு திருமணமாகிவிட்டது. தம்பி 11-ம் வகுப்பு படிக்கிறார். தந்தை கூலிவேலை செய்கிறார். தற்போது முதல்வர் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்.

எனக்கு மாதம் ரூ.1000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. இந்த தொகையை கொண்டு நான் உயர் கல்வி படித்திடவும், மேலும் சில கோர்ஸ் படிக்கவும் இருக்கிறேன். முதல்வருக்கு குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“வரப்பிரசாதமாக அமைந்தது”
கவுந்தப்பாடி பகுதி கல்லூரி மாணவி டி.சௌமியா தெரிவித்ததாவது:
ஸ்ரீவாசவி கல்லூரியில் பி.காம்., 3-ம் ஆண்டு படிக்கிறேன். அப்பா தறித் தொழிலும் அம்மா குடும்பத்தையும் கவனித்து வருகிறார். புதுமைப் பெண் திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், உதவியாகவும் உள்ளது.

பெற்றோர்களை எதிர்பார்க்காமல் அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு பணம் கட்ட இந்த உதவித்தொகை உதவியாக உள்ளது.

உயர் கல்வி படிப்பேன். ஒவ்வொரு செலவிற்கும் பெற்றோர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், எங்களது பணத்திலிருந்து செலவு செய்ய இது ஓர் அற்புதமான திட்டமாகும்.

உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆவல் சிறு வயது முதலே இருந்தது.
இச்சூழலில் முதல்வர்’ புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத் தினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பெற்றோர் களை எதிர்பார்க்காமல் எங்களது தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்து கொள்ள இது வாய்ப்பாக உள்ளது.

இத்திட்டத்தை தந்த முதல்வருக்கு நன்றி என்றார். கல்வியின் துணை கொண்டு, உலகில் சாதனை படைக்க காத்திருக்கும் பெண்களுக்கு தந்தையின் பேரன்போடு, அவர்களின் உயர் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் முதல்வருக்கு,‌ ஈரோடு மாவட்டத்தில் ‘புதுமை பெண்’ திட்டத்தில் பயன்பெற்ற மாணவிகள் மனம் திறந்து பாராட்டு தெரிவிப்பதோடு, என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

“நல்ல வேலைக்கு செல்வேன்”
கருமத்தம்பட்டி பிரிவு, வாகராயன் பாளையம்பகுதி கல்லூரி மாணவி ஜெ.சுதாராணி தெரிவித்ததாவது: சத்தியமங்கலம் காமதேனு அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., (தமிழ்) மூன்றாமாண்டு படிக்கிறேன். அக்கா உள்ளார். தந்தையும், தாயும் கூலி வேலை செய்கின்றனர்.

குறைந்த வருமானத்திலும் எங்களை படிக்க வைக்கின்றனர். மேற்கொண்டு அடுத்த செமஸ்டருக்கு எப்படி பணம் கட்டுவோம் என்று இருந்தபோது, இந்த பணம் கிடைத்தது.

இத்துடன் மீதிப்பணத்தையும் சேர்த்து அடுத்த செமஸ்டர் பீஸ் கட்ட உள்ளேன்.உதவித்தொகை கொண்டு உயர்கல்வி படிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன்.

ஒரு நல்ல வேலைக்கு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. என் நம்பிக்கைக்கு ஆக்கமும் ஊக்கம் அளித்துள்ளது முதல்வரின் ‘புதுமைப் பெண்’ திட்டம். கல்வி நம்மை கைவிடாது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தொகுப்பு
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img