fbpx
Homeதலையங்கம்பெண்களின் முகம் மலர பட்ஜெட்டில் அறிவிப்பு!

பெண்களின் முகம் மலர பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப் படவுள்ளது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.

இந்த பட்ஜெட்டுகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தெழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அண்மையில் கருத்து கேட்கப்பட்டது.

இதையடுத்து நிதி நிலை அறிக்கை தயாரிப்புப் பணி அந்தந்த துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. கடந்தாண்டு போல இந்தாண்டும் காகிதமில்லா நிதி நிலை அறிக்கை மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாத முக்கிய திட்டங்கள் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நிறைவேற்றப்படாத அந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

தமிழகத்தின் நிதி நெருக்கடி இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில், முக்கிய திட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான், என் வாழ்நாளின் மகிழ்ச்சி என்று நேற்று நடந்த மகளிர் தினவிழாவில் அவர் தெரிவித்தார்.

அந்த முக்கியத் திட்டம் மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தான் என்பதிலும் 18ம் தேதி தாக்கலாகும் நிதி நிலை அறிக்கையிலேயே முக்கிய அம்சமாக அறிவிக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை.

அந்த இனிக்கும் செய்திக்காக தமிழ்நாட்டுப் பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பெண்களின் முகம் மலரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img