fbpx
Homeபிற செய்திகள்‘மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம்’ இதுவரை 8.25 கோடி பயணங்கள்

‘மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம்’ இதுவரை 8.25 கோடி பயணங்கள்

சேலம் மாவட்டத்தில், ‘மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம்’ கீழ் இதுவரை 8.25 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 66.26 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் 07.05.2021 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்து கையொப்பமிட்டார்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லத்தரசிகள், உயர்கல்வி பயிலும் மாணவியர், பணிபுரியும் மகளிர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்தார். வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் சேலம் மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மகளிரின் முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்.
233 நகரப் பேருந்துகள்

‘மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்’ குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளதாவது: அரசுப் போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் எருமாபாளையம், வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம் ஆகிய கிளைகளில் இருந்து 233 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கட்டணமில்லா பயண திட்டத்தால் பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 25.38 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து தற்போது 2022 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 66.26 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் தற்போது வரை மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் 8.25 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக நகரப் பேருந்துகளில் பணிக்கு செல்லும் பெண்களும், உயர்கல்வி படிப்புக்குச் செல்லும் பெண்களும் இத்திட்டத்தினால் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர் என்றார் ஆட்சியர் செ.கார்மேகம்.

“ஆண்டுக்கு ரூ.14,400 மிச்சம்”
மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்தின் கீழ் பயனடைந்த சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதி பூ வியாபாரி இராஜேஸ்வரி (வயது 65) தெரிவித்ததாவது:

கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நானும் என் கணவரும் தனியே வசித்து வருகிறோம். கடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பூ வியாபாரம் செய்கிறேன்.
அஸ்தம்பட்டியில் இருந்து பூ மார்க்கெட் செல்லவும், அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லவும், ஒரு நாளுக்கு பயணச்செலவாக ரூ.30/- முதல் ரூ.40/- ஆகிறது.

சீசனுக்கு ஏற்றார் போல் நாள் ஒன்றுக்கு ரூ.300/- முதல் ரூ.400/- வரை லாபம் கிடைக்கும். இதில் ஒரு பகுதி பேருந்து பயணத்திற்கே செலவாகி வந்தது.
மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்தில், பயணம் செய்வதால், மாதம் ஒன்றுக்கு ரூ.1,200/- மிச்சமாகிறது. இதுவே வருடத்திற்கு ரூ.14,400/- மிச்சமாகிறது.

இந்த பணத்தை குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க வசதியாக உள்ளது. கட்டணமில்லா பயணத்திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

“உயர்கல்விக்கு பயனளிக்கும்”
ஓமலூர் பகுதி கல்லூரி மாணவி கௌசிகா தெரிவித்ததாவது:
சேலம் அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தந்தை இல்லை. தாயார் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து என்னையும், தம்பியையும் படிக்க வைத்து குடும்பச் செலவுகளையும் பார்த்து வருகிறார்.

பேருந்தில் கல்லூரி சென்று வர தினமும் ரூ.40/- வரை செலவாகும். எனக்கு மட்டும் போக்குவரத்திற்கு மாதம் ரூ.1,000/- வரை செலவானது.
இந்நிலையில் முதல்வரின் கட்டணமில்லா பயணத் திட்ட அறிவிப்பு, எங்களைப் போன்ற மாணவிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

எனக்கு வருடத்திற்கு மட்டும் சுமார் ரூ.10,000/- வரையில் போக்குவரத்து செலவு மிச்சமாகியுள்ளது. இப்பணத்தை, தாயார் எனது மேற்படிப்பிற்கும், குடும்பச் செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள பயனாக உள்ளது.

இதுதவிர புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் முதல்வர் எங்களைப் போன்ற அரசுப் பள்ளியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000/- வழங்கி வருகிறார்.

மகளிரின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, பல்வேறு சிறப்பான திட்டங்களை வழங்கி வரும் முதல்வருக்கு குடும்பத்தின் சார்பிலும், மாணவிகளின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கௌசிகா.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி, இதுபோன்ற சிறப்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கான வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் புதுமைப் பெண் என்ற உன்னதத் திட்டம், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணத் திட்டத்தினையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதே இதற்குச் சான்றாகும்.
‘இத்தகைய திட்டங்கள் செலவு அல்ல, இது அரசின் கடமை’ என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தொகுப்பு:
ச. சுவாமிநாதன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img