fbpx
Homeதலையங்கம்மத துவேஷத்தை விட்டொழியுங்கள்!

மத துவேஷத்தை விட்டொழியுங்கள்!

கர்நாடகாவில் கடந்த மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் பல இந்து கோவில் திருவிழாக்களின்போது இஸ்லாமியர்கள் கடை வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இஸ்லாமியர் கடையில் இந்துக்கள் யாரும் இறைச்சி வாங்கக்கூடாது என பஜ்ரங் தள் அமைப்பினர் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு தொடர்ந்தால் கர்நாடகத்தில் மத நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாகி விடும். இது சீர் செய்யப்படாவிட்டால் இந்தியா ஓர் மத சார்பற்ற நாடு என்று கூறுவதும் அர்த்தமற்றதாகி விடும்.

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் பேட்டி அளித்தபோது, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு கர்நாடகம் பெயர் பெற்றது. அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

சீருடை (ஹிஜாப்) விவகாரம் முடிந்துவிட்டது. எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு பொதுமக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் வரும்போது, அவற்றுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முடியும். அதனால், அனைவரும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் சட்டம்&-ஒழுங்கை காப்பாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்திருப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது.

மத துவேஷம் உருவாகாமல் தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். மத துவேஷத்தை அனைத்து தரப்பினரும் கைவிட்டு, மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, இந்தியா என்பதை உலகே நம்புகிறது. அதற்குக் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img