fbpx
Homeதலையங்கம்மன பலவீனத்தில் இருந்து மாணவர்களை மீட்போம்!

மன பலவீனத்தில் இருந்து மாணவர்களை மீட்போம்!

ஒரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிப்பது 10 மற்றும் 12-ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்கள் தான் என்று சமுதாயத்தில் ஒரு புரிதல் நிலவி வருகிறது. ஆனால் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை.

வறுமையை வெல்லும் சக்தி கல்விக்கு உள்ளது. இருப்பினும் கல்வியால் மட்டுமே அது சாத்தியம் என்று கூறிவிட முடியாது. கல்வியுடன் இணைந்து ஒரு நபரின் தனித்திறன், தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம், மனபாங்கு மற்றும் கடின உழைப்பு என்று இவை அனைத்தும் இணையும்போது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி என்பது சாத்தியமாகும்.

கொரோனா கால இடைவெளி குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்காரணத்தால் கூட சிலர் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம் அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம்.
எனவே 10 மற்றும் 12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்களோ அல்லது தோல்வியோ அடைந்திருந்தால் அதை நினைத்து மாணவர்கள் கவலையடைய வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் தேர்ச்சி பெற்று விட்டார்கள், அதிக மதிப்பெண்கள் வாங்கி விட்டார்கள் என்று உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களை நீங்களே தாழ்த்தியும், குறைத்தும் மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறன் என்று ஒன்று உள்ளது. அதனை நீங்கள் அடையாளம் காணுங்கள். உங்களால் வாழ்க்கையில் வெல்ல முடியும்.

ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் ஒன்றும் குடிமூழ்கிப் போகாது. ஆனால், தேர்வில் தோல்வி அடைந்த 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது விபரீதமானது,- துயரப்படவேண்டியது. வகுப்புகளில் மனோதத்துவ நிபுணர்கள் மூலம் இருபால் மாணவர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் கூடிய வழிகாட்டுதலைக் கற்பிக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

தேர்வில் தோல்விமூலம் ‘நமக்கு எல்லாமே போய்விட்டது’ என்று கருதி உயிரை மாய்த்துக் கொள்ளும் மன பலவீனத்திலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

இதில் அரசு நிர்வாகம், பெற்றோர்கள்,- ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரது பங்களிப்பும் முக்கியம். இனி வரும் காலங்களிலாவது விலை மதிப்பற்ற மாணவச் செல்வங்கள் அற்பக் காரணத்துக்காக தன் இன்னுயிரை தானே போக்கிக் கொள்ளும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

படிக்க வேண்டும்

spot_img