தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டக்கூடாது என்றும் உண்மை நிலையை சொன்னால் தான் மக்களுக்கு பயத்துடன் விழிப்புணர்வும் ஏற்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருப்பது சரியான புரிதல்.
தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என்றாலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 8 சதவீதம் கூட தாண்டாத இறப்பு விகிதம் தற்போது ஏறத்தாழ 2 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
கடந்த 10 நாட்களில் பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 25 சதவீதம் குறைந்திருக்கிறது.
அதே நேரத்தில் கடந்த 21ம் தேதி நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் 467 பேர் என்றால் மே 31ம் தேதி அந்த எண்ணிக்கை 475. இந்த எண்ணிக்கை கூட சரியான புள்ளி விவரம் தானா என்பதை அறுதியிட்டு கூற முடியவில்லை.
நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுப்பதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட ஒருவர், ஓரளவுக்கு குணமாகி 14 நாட்களுக்கு பிறகு இறக்கும்போது அவரது சளி மாதிரியை பரிசோதித்தால் அதில் தொற்று காணப்படுவதில்லை. அதனால் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர் என்கிற கணக்கில் அவரை சேர்த்துக் கொள்வதில்லை.
நீண்டநாள் சிகிச்சை பெற்றுக் கொண்டதால் நோய்த் தொற்றின் எதிர் விளைவுகளாலும் குறைந்து விட்ட எதிர்ப்பு சக்தியாலும் அவர்களது இணை நோய்கள் காரணமாக உயிரிழப்போர் பலர். அவர்களது இறப்பும் கோவிட் 19 உயிரிழப்பாக கணக்கிடப்படுவதில்லை.
மத்திய, மாநில அரசுகள் சரியான விவரங்களை வெளியிடுவது, அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மருத்துவத் துறையினரும் நிர்வாகமும் நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை செம்மைப்படுத்தவும் உதவும்.
புள்ளி விவரங்கள் பொய் சொன்னாலும் மயானப் புகை உண்மையை உணர்த்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விடக்கூடாது.