fbpx
Homeபிற செய்திகள்‘முதலமைச்சரின்‌ காலை உணவுத் திட்டம்’ பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 111 அரசுப் பள்ளிகளில் துவக்கம்: 6,460...

‘முதலமைச்சரின்‌ காலை உணவுத் திட்டம்’ பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 111 அரசுப் பள்ளிகளில் துவக்கம்: 6,460 மாணவர்கள் பசியாறுகின்றனர்

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 111 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரை பயின்று வரும் 6,460-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பாலக்கோடு (தெற்கு) ஊராட்சி ஒன்றிய அண்ணா தொடக்கப்பள்ளியில், முதற்கட்டமாக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ துவக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி தொடக்கப்‌ பள்ளியில்,‌ மாபெரும் புரட்சி திட்டமான, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை, அப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி, 15.9.2022 அன்று தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆட்சிப்‌ பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கடந்த 7.5.2022 அன்று சட்டமன்றப் பேரவை விதிகளில், விதி எண். 110-ன் கீழ் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தமிழ்நாட்டில்‌ உள்ள 38 மாவட்டங்களில்‌, இத்திட்டத்தினை செயல்படுத்தும்‌ வகையில்‌ ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

417 மாநகராட்சி பள்ளிகளில்‌ 43,681 மாணவர்கள்‌, 163 நகராட்சி பள்ளிகளில்‌ 17,427 மாணவர்கள்‌, 728 வட்டாரம்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி பள்ளிகளில்‌ 42,826 மாணவர்கள்‌, 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில்‌ 10,161 மாணவர்கள், என மொத்தம்‌ 1,545 பள்ளிகளில்‌ தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரை பயின்று வரும் 6,460-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பாலக்கோடு (தெற்கு) ஊராட்சி ஒன்றிய அண்ணா தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 16.09.2022 அன்று ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை’ தொடங்கி வைத்தார்.

மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், அப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியோரைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

“கவலை தீர்ந்தது”
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த மா.ரேகா தெரிவித்ததாவது:
கணவர் பெயர் மாதையன். கூலி வேலை செய்கிறார். 2 குழந்தைகள். மகன் லோகேஷ்வரன் பாலக்கோடு (தெற்கு) ஊராட்சி ஒன்றிய அண்ணா தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பும், மகள் சுபஸ்ரீ இதேபள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

ஏழ்மையான குடும்பம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த விதவிதமான உணவுகளை நாள்தோறும் காலையில் பள்ளியிலேயே சாப்பிட்டு கொள்கிறார்கள். மதியமும் அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்கிறது. இப்போது என்னுடைய கவலையெல்லாம் தீர்ந்து விட்டது.

மனவேதனை மற்றும் ஏக்கத்தினை போக்கி, குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு, காரணமான முதல்வருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“கற்றலில் ஆர்வம் தந்த உணவு”
அண்ணா தொடக்கப் பள்ளியில் இடைநிலை உதவி ஆசிரியர் மோ.கல்பனா தெரிவித்ததாவது:

பள்ளியில் சுமார் 333 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் இரவில் சமைத்த உணவினை காலை உணவாக உண்டு பள்ளிக்கு வருவதும், சில நேரங்களில் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவதையும் கண்டு வேதனையோடு இருப்போம்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் சத்தான காலை உணவினை முழுமையாக உண்டு சோர்வின்றி மிகவும் சுறுசுறுப்பாகவும், கற்றலில் மிகுந்த ஆர்வத்துடனும் இருக் கிறார்கள் என்றார்.

“காலையிலேயே சூடான உணவு”
மாணவி பர்ஹாஞ்சு தெரிவித்ததாவது:
அப்பா பி.ஆயுப். அம்மா ஆர்.அஷ்மா. 5-ம் வகுப்பு படிக்கிறேன். பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர். சாப்பாட்டுக்கு கஷ்டமாக இருக்கு. காலையிலேயே வேலைக்கு போற தனால சில நாட்கள் சமைக்கமாட்டாங்க.

இரவு சமைச்ச சாப்பாட்ட அவங்களும் சாப்பிட்டு, எங்களுக்கும் கொடுப்பாங்க.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் காலையில 8.15 மணிக்கெல்லாம் சூடான, சத்தான சாப்பாடு கிடைக்கிறது. பள்ளியில படிக்கிற எல்லா குழந்தைகளும் காலையிலே சத்தான காலை உணவை சாப்பிட்றாங்க என்றார்.

“ஏக்கம் போக்கியது”
மாணவன் உதயபாரதி தெரிவித்ததாவது:
அப்பா ஆர்.சுரேஷ், லாரி ஓட்டுநர். அம்மா திவ்யா. 4-ம் வகுப்பு படிக்கிறேன். சரியான வருமானம் கிடைக்காததால் சாப்பாட்டுக்கு சிரமமாக இருக்கும். வேலைக்கு போறதனால சில நாட்கள் சமைக்கமாட்டார்கள்.

மதிய சாப்பாட்டுக்கான நேரம் வர வரையில் ஏக்கத்தோடு காத்திருப்பேன்.
‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில்’ காலை உணவை தவறாமல் சாப்பிட்றேன். பள்ளியில படிக்கிற மற்ற குழந்தைகளும் காலையிலே வந்திடுவாங்க.

சத்தான காலை உணவை சாப்பிட்றாங்க. பள்ளியில் படிக்கிற அனைத்து மாணவ, மாணவிகளின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பசிப்பிணி ஒழித்து அறிவுப்பசிக்கு அமுதிடுவோம் என்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற அற்புதமான திட்டத்தை தந்து குழந்தைகளின் பசியினை போக்கி அறிவுப்பசிக்கு அடித்தளமிட்டு, சின்னஞ்சிறு குழந்தைகளின் உள்ளங்களில் மகிழ்ச்சியையும், பசியின்றி அவர்கள் சிறப்பான கல்வியை கற்று, உயர்ந்த இடத்தினை அடைய இத் திட்டத்தினை தந்துள்ளவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அவருக்கு தருமபுரி மாவட்டத்தில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்’ கீழ் பயன்பெற்று வரும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நன்றிக் கடன் உள்ளவர்களாக இருப்பார்கள்.

தொகுப்பு:
மு. அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img