fbpx
Homeபிற செய்திகள்முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு குளுக்கோ மீட்டர் உபகரணம்- கோவை ஆட்சியர்...

முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு குளுக்கோ மீட்டர் உபகரணம்- கோவை ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கல்

கோவை மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு குளுக்கோ மீட்டர், குளுக்கோ ட்ரிப்ஸ் ஆகிய உபகரணங்களை இதயங்கள் அறக்கட்டளை சார்பில் நேற்று (செப்.6) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இதயங்கள் அறக்கட்டளை தலைவர் மரு.கிருஷ்ணன் சுவாமிநாதன், குழந்தைகள் நல பிரிவுத் தலைவர் மரு.கீதாஞ்சலி, கோவை ZF நிறுவனத்தின் இயக்குநர் தீபக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
டைப் 1 சர்க்கரை நோய் முக்கியமாக குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடம் கண்டறியப்படுகிறது. உடலில் இன்சுலின் முற்றிலும் சுரக்காதபோது, இந்தவகை நீரிழிவு நோய் வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 20,000 குழந்தைகள் டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 800 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு இதயங்கள் அறக்கட்டளை சார்பில் குளுக்கோமீட்டர், குளுக்கோ ட்ரிப்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு படிப்பில் பாதிப்பும், மனதளவில் பாதிப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த மனவேதனை அடைகிறார்கள்.

பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் தீராத நோயில்லை. மருந்தினால் தீர்க்கக்கூடிய நோய்தான். சரியான அளவு இன்சுலின் சரியான நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக மற்ற குழந்தைகளைப் போலவே இவர்களும் வாழலாம். ஆனால், இதற்கான மருத்துவ செலவு அதிகம். இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதை ஒரு நோய் என்று கருதாமல் குறைபாடு என்று கருதலாம். எவ்வாறு நம் உடம்பில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்படுகிறதோ, அதுபோலவே இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பு முற்றிலும் இல்லாமல் இருப்பதால் வரக்கூடிய ஒரு குறைபாடாகும்.

எனவே, இந்தகுறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இன்சுலின் அவர்களுக்கு வழங்கப்பட்டால் எவ்வித பிரச்சனைகளும் வராது. எனவே, பெற்றோர் வருத்தப்பட வேண்டாம்.

உங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். இந்த குழந்தைகளுக்கு குளுக்கோமீட்டர், குளுக்கோஸ் ட்ரிப்ஸ் வழங்கிய இதயங்கள் அறக்கட்டளைக்கும், நிதியுதவி வழங்கிய ஆஸ்திரேலியாவை சார்ந்த LFAC, பெங்களூரைச் சார்ந்த RTL ஆகிய நிறுவனங்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்.

படிக்க வேண்டும்

spot_img