fbpx
Homeதலையங்கம்வள்ளல் ஷிவ் நாடார் - தமிழகத்திற்கே பெருமை!

வள்ளல் ஷிவ் நாடார் – தமிழகத்திற்கே பெருமை!

இந்தியாவில் சமூகப் பணிகளுக்காக அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிலே முதலிடம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார்.

1976ல் துவங்கப்பட்ட ஹெச்.சி.எல் நிறுவனரான இவர், ரூ.1,161 கோடி நன்கொடை வழங்கி விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியை (ரூ.484 கோடி) பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாயை நன்கொடையாக அள்ளிக் கொடுத்து வாரிவாரி வழங்கும் வள்ளலாக மாறி இருக்கிறார். 2016ம் ஆண்டும் ஷிவ் நாடார் அதிக நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

77 வயதாகும் ஷிவ் நாடார் தூத்துக்குடி மாவட்டம் மூலைப்பொழி கிராமத்தைச் சேர்ந்தவர். தினத்தந்தி அதிபர் சி.பா.சிவந்தி ஆதித்தனார் இவரது தாய் மாமன் ஆவார்.

1996ல் சென்னையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியைத் துவங்கிய இவர் கல்வி, உடல்நலம், சமூக மேம்பாட்டில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பதை இந்தியாவுக்கு எடுத்துக் காட்டி உள்ளார், ஷிவ் நாடார்.

2008ம் ஆண்டு இவர், ஷிவ் நாடார் அறக்கட்டளையை துவங்கி அதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்க உதவி வருகிறார். தற்போது தமிழக அரசோடு கைகோர்த்து புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழகம் மட்டுமல்ல கல்வியில் மிகவும் பின்தங்கிய உத்தரபிரதேசத்தில் இரண்டு உயர்தர பள்ளிகளை துவக்கினார். அம்மாநிலத்தில் பரவலாக 200 கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து முழு உதவித் தொகையுடன் கல்வி பயில வழி செய்தார்.

அதுமட்டுமல்ல, ஹெச்.சி.எல் அலுவலகம் அமைந்துள்ள 11 நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் அவர்களின் நலனுக்காக ‘உதய் திட்டம்‘ செயல்படுத்தி வருகிறார். உபியின் முக்கிய தொழில் நகரமான நொய்டாவை தூய்மையாகப் பராமரிப்பதில் ஹெச்.சி.எல் பெரும் பங்கு வகிக்கிறது.

அங்கு 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இவையெல்லாம் ஹெச்சிஎல் நிறுவனம் செய்து வரும் சமூகப் பணிகளில் ஒரு சில மட்டுமே. விளம்பரம் தேடாமல் ஷிவ் நாடாரின் சமூகப் பணி தொடர்கிறது.

அள்ளிக் கொடுக்கும் ஷிவ் நாடாரின் கரம் தொழிலிலும் சமூக சேவைகளிலும் என்றென்றும் நிலைத்து ஓங்கட்டும்.

வள்ளல் ஷிவ் நாடாருக்கு சல்யூட்!

படிக்க வேண்டும்

spot_img