fbpx
Homeபிற செய்திகள்100 நாள் வேலைத்திட்டம் நீடூழிகாலம் நீடிக்கட்டும்!

100 நாள் வேலைத்திட்டம் நீடூழிகாலம் நீடிக்கட்டும்!

உலக வங்கியின் பாராட்டு, கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு என முக்கியத்துவம் பெற்றது 100 நாள் வேலைத் திட்டம். ஆனால் உலகில் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் என கணிக்கப்பட்ட இந்த திட்டம், தற்போது ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா? அரசியல் கட்சிகள் தொடங்கி நீதிமன்றம் வரை அதிருப்தி தெரிவிப்பது ஏன்?

கிராமப்புறத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதன்படி, குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படும்.

கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டின் கடலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் 200 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து, 2007ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் மேலும் 130 மாவட்டங்களுக்கும் 2008ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ரூ.80 ஊதியம் வழங்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு நாளுக்கு ரூ.280 வரை வழங்கப்படுகிறது. இதை ரூ.300 ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் இந்த தொகையும் மாறுபடுகிறது.

ஆண்டிற்கு, நூறு நாட்கள் வேலை வழங்கும் திட்டம் என்பதால், 100 நாள் வேலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம், கிராம ஊராட்சிகளில் சாலைகளை சீர் செய்வது, நீர் நிலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆகையால், இந்த திட்டத்தை விவசாய பணிகளுக்கும் விரிவாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஒருபுறம் இருக்கிறது.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் தவறான வழிகாட்டுதல், தேவையற்ற வேலைகள், நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அதிகம் வருகின்றன.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, ‘’100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை.

இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க’’ உத்தரவிட்டதோடு, திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் ஊரக வளர்ச்சி துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. ஆக்கப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் குறைகளைக் களைந்து, முறைப்படுத்தி, கண்காணித்து, திட்டத்தின் பலன் முழுமையாக கிராமப்புற மக்களுக்கு சென்றடைய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது.

கிராமப்புற மக்களுக்கு கைகொடுக்கும் இத்திட்டத்தில் ஏனோதானோ நிலை கூடாது. குறைகளைக் களைந்து செம்மையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே ஏழை, எளிய மக்களின் அன்பான வேண்டுகோள்!

படிக்க வேண்டும்

spot_img