தருமபுரியில் பயன்பெற்ற மாணவிகளிடம் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்.
இது குறித்து ”நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் பேசியுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் உயர்கல்வி பயிலும் வரையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) அறிவித்துள்ளார்கள்.
இத்திட்டத்தின் கீழ், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படுகிறது. இத்தகைய முன்னோடி திட்டங்களின் மூலம் மாணவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்ட போது, அமைச்சரால் மாணவிகளுக்கு புதுமைப்பெண் ஏடிஎம் கார்டு, சான்றிதழ் கோப்புறை, வேலைவாய்ப்பு வழிகாட்டு புத்தகம் மற்றும் நிதிநிலைக்கான கல்வியறிவு புத்தகம் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தற்போது 91 கல்லூரிகளில் பயிலும் 14644 மாணவிகள் பயன்பெற்று, மாதந்தோறும் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படுகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் – புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்பது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மிகச்சிறந்த உதவித்தொகையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற தருமபுரி மாவட்டம், அரூர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் பட்டபடிப்பில் பயின்று வரும் மாணவி கெத்சியாள் கூறியதாவது:
எனது பெயர் எஸ்.கெத்சியாள். நான் அரூர் கே.கே.நகர் பகுதியில் வசிக்கிறேன். நான் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்துக் கொண்டு இருக்கிறேன். நான் 12-ஆம் வகுப்பு படித்து விட்டு மேற்படிப்பிற்கு பணம் இல்லாமல் பட்டப்படிப்பு படிக்க முடியாமல் இருந்தேன். நம் முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இந்த உயர்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நான் பயன் பெற்றேன். அரசானது எனக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் தருகிறார்கள். இந்நிதி உதவியை வைத்து நான் படிக்கும் புத்தகத்தையும், நோட்டுகளையும் வாங்கி நான் பயன்பெறுகிறேன். இந்த திட்டத்தை செயல்படுத்தி கிராமப்புற மாணவிகள் கூட பெரிய உயரங்களை அடைய வாய்ப்பு உருவாக்கும். இத்திட்டத்தினை கொண்டு வந்த முதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கம்மம்பட்டி ஊராட்சி, பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் பட்டபடிப்பில் பயின்று வரும் மாணவி மாரியம்மாள் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:
நான் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்துக் கொண்டு இருக்கிறேன். உயர்கல்வி படிக்க வேண்டுமென்றால் அதிக பணம் தேவைப்படுகிறது. எங்கள் வீட்டில் என்னை கஷ்டப்பட்டுதான் படிக்க வைக்கிறார்கள். பள்ளி படிப்பை முடித்து, கல்லூரிக்கு செல்வதே கடினமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் நம் முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தினை அறிமுகப்படுத்தி என்னை போன்ற அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆகையால் நான் புதுமை பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்ததால் என்னால் கல்லூரிக்கு செல்ல முடிகிறது. மேலும் படிக்க உதவியாக இருக்கின்றது. முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.