கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த 2021 மார்ச் 31க்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் 354 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017-2018ம் ஆண்டுகளில் 11.15 கோடி நோட்டுகளாகவும், 2018-2019ம் ஆண்டு 4.66 கோடி நோட்டுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு 2,272 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு 74,898 ஆக உயர்ந்தது. அதனை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 2.44 லட்சமாக உயர்ந்தது.
இதன் காரணமாக கடந்த 2021 மார்ச் 31 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது. மேலும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருவதால் 2000 ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பை நோக்கி செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் ஒரு பணம் மதிப்பு இழப்பை எதிர் நோக்க நேரிடும் நிலை உருவாகி இருக்கிறது. ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட துன்பத்தையும் வேதனையையும் இன்னும் நாட்டு மக்கள் மறக்கவில்லை. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தைக் குறைப்பது சந்தேகத்தைத் தருகிறது.
மீண்டும் அத்தகைய பெரும் துன்பத்தையோ சிறு துன்பத்தையோ எதிர்கொள்ள நாட்டு மக்கள் தயாராக இல்லை. ஒன்றிய அரசு விழிப்புடன் திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்!