fbpx
Homeபிற செய்திகள்2308 பெண்களுக்கு ரூ.18,06,87,000 திருமண நிதியுதவி, தங்க நாணயம் இராணிப்பேட்டை பயனாளிகள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றி!

2308 பெண்களுக்கு ரூ.18,06,87,000 திருமண நிதியுதவி, தங்க நாணயம் இராணிப்பேட்டை பயனாளிகள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றி!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-&22-ம் நிதியாண்டில், மொத்தம் 2308 பயனாளிகளுக்கு நிதியுதவியாக ரூ.18 கோடியே 06 இலட்சத்து 87 ஆயிரம் மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நல்லாசியுடன், 07-.05.-2021 அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட முதல்வரின் அரசு ஏழை பெண்கள், கைம்பெண்களின் பெண் பிள்ளைகள், பெற்றோர் இல்லாத பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் கைம்பெண்கள் மற்றும் சாதி,மத பேதமற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் கலப்புத் திருமணம் செய்வோர் போன்றோருக்கு திருமண நிதி உதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

என்னென்ன திட்டங்கள் பெண் கல்வியை உயர்த்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக சீர்திருத்த திருமணங்களை ஊக்குவித்தல் ஆகிய நோக்கத்திற்காக திருமண நிதியுதவி திட்டம் தொடங்கப்பட்டது.

வறிய நிலையில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்தை நடத்த உதவுவதோடு ஏழ்மை நிலையில் உள்ள பெண்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் 03-06-1989 முதல் துவங்கப்பட்ட திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமாகும்.

ஏழை கைம்பெண் தாய்மார்களின் மகளின் திருமணத்தை நடத்த உதவும் நோக்கில் 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டமாகும்.

ஆதரவற்ற பெண்கள் திருமணம் செய்து கொள்ள உதவி செய்திடும் வகையில் 1985-ம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்ட திட்டம், அன்னை தெரசா நினைவு திருமண நிதியுதவித் திட்டமாகும்.

கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடனும் அவர்களின் மறுமணத்தை ஊக்கப்படுத்தும் விதத்திலும் 1975-ம் ஆண்டு முதல் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகத்தில் காணப்படும் சாதி வேறுபாட்டினை அகற்றவும், வரதட்சணைக் கொடுமைகளை ஒழிக்கும் விதத்திலும் கலப்புத் திருமணங்களுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்த 1968 முதல் கலப்புத்திருமண நிதியுதவி திட்டம், தற்போது டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம் என செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-&22-ம் நிதியாண்டிற்கு மொத்தம் 1319 பட்டதாரி பயனாளிக்கு தலா ரூ.50,000 வீதம் ரொக்கமாகவும் ரூ.6 கோடியே 59 இலட்சத்து 50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ரூ.5 கோடியே 14 இலட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும் ஆக மொத்தம் ரூ.11 கோடியே 73 இலட்சத்து 91 ஆயிரமும், 989 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரொக்கமாகவும் ரூ.2 கோடியே 47 இலட்சத்து 25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ரூ.3 கோடியே 85 இலட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 32 இலட்சத்து 96 ஆயிரம் வழங்கப்பட்டது.

இவை எல்லாம் சேர்த்து மொத்தம் 2308 பயனாளிகளுக்கு நிதியுதவி ரூ.18 கோடியே 06 இலட்சத்து 87 ஆயிரம் மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

பேருதவி தந்தது
8 கிராம் தங்கம், ரொக்கம்
பயனடைந்த பயனாளிகள் தெரிவித்ததாவது:
எனது பெயர் ஜோதி. வயது 48. கணவர் பெயர் விஜயகுமார், வயது 60. வாலஜாப்பேட்டையில் வசிக்கிறோம். நாங்கள் வயது முதிர்வு மற்றும் உடல் நலப் பிரச்சனை காரணமாக வேலைக்குச் செல்வதில்லை.

முதுநிலைப் பட்டதாரியான எனது மகள் யமுனாவை வெங்கட்ராமன் என்பவருக்கு திருமணம் முடித்துவைத்தோம். இத்திருமணம் 2019-ம் ஆண்டு நடந்தது. எங்களுக்கு எந்தவொரு வருமானமும் கிடையாது. தற்போது என் மகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

இந்த உதவி என் குடும்பத்துக்கும் எனது மகளின் வாழ்க்கைக்கும் பேருதவியாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாட்டிய வறுமையை போக்கியது நிதியுதவி
எனது பெயர் அபியுன்னிஷா, வயது 50. கணவர் ரபிக் அஷமது, வயது 52. கஸ்பாவில் வசித்து வருகிறோம். நான் பீடித் தொழில் செய்கிறேன். என் கணவர் உடல் நல பிரச்சனை காரணமாக வேலைக்குச் செல்வதில்லை.

எனது மகள் சோபியா, பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவருக்கும் தாவூத் பாஷா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு நிக்கா செய்து வைத்தோம். எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தோம். தற்போது என் மகளுக்கு தாலிக்கு ஒரு சவரன் தங்கமும், ரூ.25 ஆயிரமும் கொடுத்திருக்கிறார்கள்.

இது என் குடும்பத்திற்கும், மகளின் வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வுதவியை செய்த முதல்வருக்கு என் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து திருமண நிதி உதவித் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருவதால், தமிழகத்தில் ஏழை, எளிய பெற்றோர்களின் பெண் பிள்ளைகளும், பெற்றோர்களும் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் என்றென்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அரசுக்கும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என தெரிவித்தனர்.

தொகுப்பு:
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img