கோவை
கோவை மாநகராட்சி 34, 35, 36ம் வார்டுகளுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக இலவச அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது.
கோவையில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய் தொற்று பாதித்துள்ள பகுதிகளில் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பணி செய்து வரும் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் முன் கள பணியாளர்களை நேரு நகர் அரிமா சங்கத்தினர் கவுரபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி 34, 35, 36ம் வார்டுகளில் பணியாற்றும் சுமார் 250 தூய்மை பணியாளர்களுக்கு ஐந்து கிலோ அரிசி மூட்டைகளை நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
நேரு நகர் அரிமா சங்க செயலாளர் செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் மண்டல தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைவர் பாஸ்கரன், இந்நாள் தலைவர் நேரு நகர் நந்து, பொருளாளர் ஹரீஷ், குபேந்திரன், வினோத், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கோவை மத்திய போக்குவரத்து துறை அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினார். இதில் சுப்ரமணியம்,நேருநகர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.