fbpx
Homeபிற செய்திகள்525 கிராம், 840 கிராம் எடை கொண்ட பச்சிளங் குழந்தைகளை காப்பாற்றிய நாமக்கல் அரசு மருத்துவமனை...

525 கிராம், 840 கிராம் எடை கொண்ட பச்சிளங் குழந்தைகளை காப்பாற்றிய நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில், பிறந்தபோது 525 கிராம், 840 கிராம் எடை மட்டுமே இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை மாதக்கணக்கில் தீவிர கண்காணிப்பு சிகிச்சை அளித்து காப்பாற்றி, சாதனை படைத்த நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த சாதனா (31) விக்னேஷ் தம்பதியினருக்கு 01/11/2021 அன்று சேலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

மிக எடை குறைவான(Incredible Low Birth Weight)
அதீத குறைப் பிரசவக் குழந்தைகளை (Extreme Preterm 25- 26 Weeks) அதே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

சுமார் ஒரு மாத அளவில் அங்கு சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைகளின் உடல் நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை. மேலும் பல லட்சங்கள் செலவும் ஆகிவிட்டது.

எனவே குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைகளை நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு எடுத்தனர்.

அதன்படி, சேலம் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு 33 நாட்கள் ஆன நிலையில், குழந்தைகளின் பெற்றோர் இரட்டைக் குழந்தைகளை வெண்டிலேசன் வசதி கொண்ட சிறப்பு அவசர சிகிச்சை ஊர்திகள் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஓரிரு நாட்களிலேயே இரட்டைக் குழந்தைகளில் 720 கிராம் எடை மட்டுமே கொண்ட ஆண் குழந்தை தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதனால் பெற்றோர்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

தொடர் கண்காணிப்பு
மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, குழந்தைகள் துறைத் தலைவர் மரு.கே.சுரேஷ்கண்ணன், பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர் மரு.டி.கண்ணன் ஆகியோர் உயிருடன் இருக்கும் மற்றொரு குழந்தையை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற சவாலுடன் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

இக்குழந்தைகள் சிகிச்சை பெறுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தினந்தோறும் கேட்டறிந்து வந்தார்.

80 நாட்களுக்கும் மேலாக தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் இருந்த பெண் குழந்தை தற்பொழுது 525 கிராமிலிருந்து, ஒரு கிலோவுக்கு (1.3Kg) மேல் எடை அதிகமாகி ஆரோக்கியத்துடன் உள்ளது.

இதனால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததுடன், தங்களது குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

சவால்களைத் தாண்டி
இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதாவது: இவ்வளவு எடை குறைவான மேலும் இவ்வளவு குறைமாத குழந்தைகளைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமே.

இதுபோன்ற குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் வளர்ச்சி குறைபாடு (RDS), இருதய குறைபாடு (PDA), சரியாக பால் குடிக்க முடியாமல் போதல், டியூப் வழியாக கொடுக்கும் பாலையும் சரியாக செரிமானம் செய்ய முடியாத தன்மை FEED INTOLERANCE), எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் தீவிரமான கிருமித் தொற்று ஏற்படுதல் (SEVERE SEPSIS), அதீத ரத்தசோகை (ANEMIA OF PREMATURITY), திடீ ரென்று மூச்சு நின்று போவது(APNEA OF PREMATURITY)போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

இத்தனை சவால்களையும் தாண்டி பெற்றோரின் துணையுடன் குழந்தையை காப்பாற்றி உள்ளோம்.

இது போன்ற மிக குறைமாத பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பின்னாளில் மூளை வளர்ச்சிக் குறைபாடு (CP/MR), பார்வைக் குறைபாடு(ROP), சரியாக காது கேட்பதில் குறைபாடு(HEARING DEFECTS) போன்ற பிரச்சினைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதற்காக இந்த குழந்தைக்கு பார்வை குறைபாடு அறிகுறிகள் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தொடர் கண்காணிப்பு வழிமுறைகளையும், வளர்ப்பு ஊக்குவிப்பு நெறிமுறைகளையும் பெற்றோர்கள் மேற்கொள்ள வழிவகை செய்துள்ளோம் என்றனர்.

வரலாற்றில் முதல் முறை
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் குறை மாதத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகின்றன.

மாநிலத்திலேயே பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனையில் நாமக்கல் அரசு மருத்துவமனை சிறப்பிடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் 525 கிராம் மட்டுமே பிறப்பு எடைகொண்ட குழந்தையைக் காப்பாற்றுவது, நாமக்கல் அரசு மருத்துவமனை வரலாற்றில் இதுவே முதல் முறை. தற்போது இந்த குழந்தை 1.400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. இதன் மூலம் ஒரு புதிய மைல் கல்லை நமது மருத்துவர்கள் அடைந்துள்ளனர்.

பிரச்சனை எதனால்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒவ்வொரு மாதமும் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இருந்து வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.

34 வாரங்களிலேயே பிறக்க கூடிய குழந்தைகளுக்கு தான் எஸ்.என்.சி.யு. கேர் பிரிவில் சிகிச்சை தேவைப்படுகிறது.

கர்ப்பமாக இருக்கும்போது மருத்துவர்கள் கூறும் தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளையும் எடுத்துக் கொள்ளாத தாய்மார்களுக்கு தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் செலவு பிடிக்கக் கூடிய சிகிச்சைகள் அனைத்தும் இங்கு முற்றிலும் இலவசமாகவே செய்யப்படுகின்றன. அதற்கென இருக்கும் மிக விலை அதிகமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகள் அரசு மருத்துவமனையிலேயே உள்ளன என்றார்.

25 நாள் சிகிச்சை
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம், பாலக்குறிச்சியை சேர்ந்த சௌந்தர்யா ஜீவானந்தம் என்ற தம்பதியினருக்கு கருவுற்று 29 வாரங்களிலேயே 2022-ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு நுரையீரல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் தொடர்ந்து 25 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் (1.060 கிராம்) வீடு திரும்பினார்கள்.

இக்குழந்தைகளை தொடர் கண்காணிப்பிற்காக குறிப்பிட்ட இடைவெளியில் வரவழைத்து அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இன்று இக்குழந்தை 1.180 கிராம் எடையுடன் முழு ஆரோக்கியத்துடன் உள்ளது.

இத்தம்பதியினரின் முதல் குழந்தை செப்டம்பர் 2018-ல் 32 வாரங்களில் 1.400 கிராம் எடையுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்தது.

இப்பெண்குழந்தைக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர கண்காணிப்பில் 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தது. தற்போது இக்குழந்தைக்கு மூன்றரை வயதாகிறது. இக்குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
நாமக்கல்.

படிக்க வேண்டும்

spot_img