மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டி சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்தது. மணமகள், கணவர் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார். இவையெல்லாம் வழக்கமாக நடக்கும் சம்பிரதாயங்கள்; நாம் பார்ப்பதும் கூட.
ஆனால் இந்த திருமணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக மணமகன், மணமகளின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். எதிர்பாராமல் நடந்த அந்த நிகழ்வை பார்த்து அதிர்ந்த அந்த இளம்பெண் மணமகனை தூக்கி நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த மணமகளோ இதில் அதிர்ச்சி அடையவோ, சங்கோஜப்படவோ ஏதும் இல்லை.
அவள் யார்?
என் சந்ததியை தொடரப்போகிறவள்.
என் பெற்றோரை அவளது பெற்றோராக போற்றப்போகிறவள்.
என்னை தந்தையாக்கி மகிழப் போகிறவள்.
குழந்தைக்காக மரணத்தை தொட்டுதிரும்புபவள்.
என் வீட்டிற்கு அஸ்திவாரமாக இருக்க போகிறவள்.
அவரது நடத்தையால் சமூகத்தில் எனக்கான அங்கீகாரத்தை தரப்போகிறவள்.
என் பெற்றோருக்கு பிறகு என்னுடன் பயணிக்கப் போகிறவள்.
இவையெல்லாவற்றையும் எனக்காக செய்யும் அவளிடம் நான் பணிந்து ஆசி பெறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று மணமகன் சொன்னது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருக்கிறது.
அதைக் கேட்டதும் ஆனந்த கண்ணீர் சிந்திய மணமகள் தன் மணவாளனை கட்டிப்பிடிக்க அவள் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர், கணவரின் பட்டு சட்டையை ஈரமாக்கியது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி உள்ளத்தால், உடலால் ஒருவரையொருவர் நேசித்து உறுதி பூண்டால் தவறுவதற்கும், தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இல்லையே. இந்த உணர்வு எல்லோரிடமும் ஏற்பட்டு விட்டால் சமூக சீரழிவு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
இது தான் எங்கள் கலாச்சாரம் என்று உலகம் அதிர கர்ஜிக்கலாமே!.