மக்களை பாதுகாக்கும் மருந்துக்கான சூத்திரங்களை மேம்படுத்துவது பற்றி தயாரிப்பு நிறுவனங்கள் யோசிக்கிறதா? என்பது கேள்விக் குறியே. தற்போதைய நிலையில் நெருக்கடியை சமாளிக்க அவசர பயன்பாட்டுக்காகத்தான் எல்லா தடுப்பூசிகளையும் அரசு அனுமதிக்கிறது. இன்னும் கூடுதலான ஆராய்ச்சிகள் இந்த மருந்துகள் மீது நடத்தப்பட வேண்டும். அதன் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் பார்த்த பிறகே மருந்தின் பயனும், பக்க விளைவுகளும் உறுதியாக தெரியவரும் என்பதும் தெரிந்ததே.
சூழ்நிலை கருதி அரசாங்கம் அனுமதி கொடுக்கும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்வது சரியான அணுகு முறையாக இருக்காது. மருந்து தீயாய் வேலை செய்வதற்கு பதில் தீமையை உருவாக்கினால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பயம் இருந்தால் மருந்து தயாரிப்பிலும் கவனம் இருக்கும். இல்லாவிட்டால் தவறுகள் நிகழ்ந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான் வரும். வியாபாரத்தை பெருக்கத்தான் தோன்றும்.
ஏற்கெனவே பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் பற்றி பல்வேறு சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன. இது படித்தவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இதையெல்லாம் தாண்டி கொரோனாவிடம் இருந்து உயிர்தப்பிக்க தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் வியாபாரத்தையும் தாண்டி மக்கள் உயிரை காப்பற்ற எண்ண வேண்டும். இதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்வதில்லை என்ற சபதத்தோடு உற்பத்தி& வியாபாரம் என்ற இரண்டையும் கையாள வேண்டும்.
முக்கியமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மீது நம்பிக்கை வைப்பதற்கு பதில் சட்ட பாதுகாப்பு கேட்டால் மக்களுக்கு அந்த நிறுவனங்கள் மீது நம்பிக்கை வராது. சந்தேகம்தான் அதிகரிக்கும் இதன் மூலம் எல்லா மருந்துகளையும் சந்தேக கண்ணோட்டத்தோடு மக்கள் பார்க்கும் நிலைமை வந்து விடும். பயம் இருந்தால் தான் தவறு நிகழ்வது தவிர்க்கப்படும். கையில் பிரம்பை பார்த்தால்தான் படிக்கும் குழந்தையும் நன்றாக படிக்கும்& இது மனித இயல்பு.