fbpx
Homeதலையங்கம்பங்குச் சந்தையைப் பங்கு போட்ட ‘சாமியார்’ யார்?

பங்குச் சந்தையைப் பங்கு போட்ட ‘சாமியார்’ யார்?

இந்திய மக்களையும் புலனாய்வு அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் பல மோசடிகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மோசடி குறித்து சமீபத்தில் தெரிய வந்தது. இந்த மோசடி மற்றும் முறைகேடுகள் நாட்டு மக்களை வெகுவாக அதிசயிக்க வைத்தன.

இமயமலையில் வசிக்கும் ஒரு சாமியாரின் அறிவுரையின் பேரில் தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்த முடிவுகளில் ஒன்று தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் குழும இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் நியமனமாகும்.

ஆனந்த் சுப்ரமணியன் பங்குச் சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில் தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் சுப்ரமணியன் முதலில் 2013&ல் என்எஸ்இ- தலைமை செயலுத்தி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2015&ல் அப்போதைய நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவால் குழு இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2016 ம் ஆண்டில், முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தேசிய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறினார்.

இமயமலையில் உள்ள ‘சாமியார்’ ஒருவருடன் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகவும், அவர் அறிவுரையின் பேரில் பல முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது.

செபியின் கூற்றுப்படி, ஆனந்த் சுப்ரமணியனின் நியமனம் மற்றும் எந்தவிதமான விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் அவரது சம்பளம் கோடிகள் கணக்கில் உயர்த்தப்பட்டது ஆகியவை அந்த இமாலய சாமியாரின் அறிவுரையின் பேரில் எடுத்த சில முட்டாள்தனமான முடிவுகளாகும்.

சித்ரா ராமகிருஷ்ணாவின் இதுபோன்ற சில முடிவுகள் பற்றிய விவாதம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனந்த் சுப்ரமணியன் பெரும் சம்பள உயர்வுடன் நியமிக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு தன்னிச்சையாக பதவி உயர்வு அளித்ததும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இரண்டே ஆண்டுகளில், அதாவது 2016ல் அவரது ஊதியம் ரூ.4.21 கோடியாக அதிகரித்தது. இதுமட்டுமின்றி, அவருக்கு குழு இயக்க அதிகாரி பொறுப்பும் வழங் கப்பட்டது. என்எஸ்இ- தணிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, சுப்ரமணியத்தின் நியமனம் தவறானது என்பது தெரிய வந்தது.

விசாரணை அறிக்கை மீதான ஆய்வுக்குப் பிறகு, ஆனந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் ராஜினாமா செய்தார்.

சித்ரா மற்றும் ஆனந்த் இருவரும் இணைந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல்வேறு முறைகேடு களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த மர்ம சாமியாரே ஆனந்த் சுப்ரமணியன் தான் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் கசிந்துவரும் நிலையில், சிபிஐ விசாரணையில் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டையே ஏமாற்றிய இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளுக்கு மக்களை திருப்திபடுத்தும் வகையில் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்காக சிபிஐ&ன் விசாரணை வளையம் இறுகி வருகிறது!

படிக்க வேண்டும்

spot_img