fbpx
Homeபிற செய்திகள்சிறுபான்மையினருக்காக நலவாரியம்- வளர்ச்சியில் ஒருங்கிணைக்க நடவடிக்கை முதல்வருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

சிறுபான்மையினருக்காக நலவாரியம்- வளர்ச்சியில் ஒருங்கிணைக்க நடவடிக்கை முதல்வருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

தாய் தான்பெற்ற குழந்தைகளில் சற்று பலவீனமாக இருக்கும் குழந்தையின் மீது அதிக கவனம் கொள்வது போல, ஜனநாயகத்தில் பலவீனமான குழந்தையாக இருக்கின்ற சிறுபான்மை இன மக்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் அடியொற்றி நடக்கும் தமிழக அரசு, சிறுபான்மையின மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், நிலை நாட்டவும், அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களை ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சியில் ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நலத்திட்ட உதவிகள்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறுபான்மையினர் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் சூழல் நிலவுகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிறுபான்மையினரின் நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மையினர் நல அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கி, அதற்காக ஆண்டுக்கு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கான ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் சிறுபான்மை யினர் கல்வி உதவித் தொகை, ஜெருசேலம் புனித பயணத்திற்கான நிதியுதவி, உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நலவாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களைச் சார்ந்த சிறுபான்மையின பொதுமக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு கடன் திட்ட உதவிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நலிந்த தொழில்
கடனுதவியால் உயர்ந்தது
தென்காசி மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்த சாதிக் அலி, வயது 36, விஸ்வநாதபுரம், செங்கோட்டையைச் சேர்ந்த பயனாளி தெரிவித்ததாவது:

நான் சூப்பர் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளேன். குடியிருப்புப் பகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களான புத்தகம், நோட்டுகள், அன்றாட தேவைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை பெண்களே நேரிடையாக வந்து வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.

ஆனால கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எனது வியாபாரம் மிகக் குறைவாக இருந்தது. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் கடினமாக இருந்தது.

அப்போதுதான், சிறுபான்மையினர் நலத்துறையின் கடனுதவிகள் வழங்கும் திட்டத்தினை அறிந்தேன். அதன் மூலம் என்னுடைய வாழ்வின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது வியாபாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் கடனுதவிகளை வழங்கினார்கள்.

இதன் மூலம் சூப்பர் பேன்சி ஸ்டோரை தரம் உயர்த்தி குடியிருப்புப் பகுதியில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களையும் விற்பனை செய்து வருகிறேன்.

எங்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் அடைய வழிவகுத்த முதல்வருத்து எங்களது குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்ப வறுமையை
மீட்டெடுத்தது தொழில்
செய்யது சுலைமானியா பேகம், வயது 29, வடகரையைச் சேர்ந்த பயனாளி தெரிவித்ததாவது:

எனது கணவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எங்களது குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லாமலும், குடும்பத் தேவைகளை சமாளிக்க முடியாத சூழலிலும் இருந்து வந்தோம்.

அப்போதுதான், சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் கடனுதவி பற்றி அறிந்தோம். அதற்காக மனு கொடுத்தோம். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

அத்தொகையினைக் கொண்டு எனது வீட்டிலேயே கவரிங் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம் எங்கள் பகுதியில் வசிக்கும் தங்க நகைகள் வாங்க முடியாதவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரியில் பயிலும் இளம்பெண்கள் ஆகியோர் எங்களிடம் கவரிங் நகைகளை வாங்கி அணிந்து கொள்கிறார்கள்.

கவரிங் நகைகளை குறைந்த லாபத்திற்கு விற்பனை செய்து வருகிறேன். எனது குடும்ப வறுமையில் இருந்து மீட்டெடுத்து வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு உறுதுணையாய் இருந்த முதல்வருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

“கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி”
என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப நலிந்த குடிகளுக்காக ஈதல், அருள் செய்தல், நடுநிலை நீதி வழங்குதல், பாதுகாப்பு தருவது என்னும் இந்நான்கு மாட்சிகளையும் உடைய ஆட்சியாளர்கள் அரசாட்சி செய்யும்

இனத்திற்கெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்காத் திகழ்வர் என்னும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறுபான்மையினர் நலன் காக்கும் சீரிய அரசாகத் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தென்காசி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img