fbpx
Homeதலையங்கம்அணைகளைப் பாதுகாக்க மாநில அரசால் முடியாதா?

அணைகளைப் பாதுகாக்க மாநில அரசால் முடியாதா?

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணைப் பாதுகாப்பு மசோதா, டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் கடந்த 18.02.2022 அன்று முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரிய, குறு, தடுப்பணைகள் என 5,264 அணைகளை, ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், அணைகள் பாதுகாப்பு சட்டம் அமைந்துள்ளது.

அதன் அடிப்படையில், தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கி, அதன் வாயிலாக, அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அணைகள் மீதான உரிமைகளை மாநில அரசு இழந்து விடும். மேட்டூர் அணை, வைகை, கீழ்பவானி உள்ளிட்ட அணைகளும், சாத்தூர் அணை, தாமிரபரணி உள்ளிட்ட தடுப்பணைகளும் ஒன்றிய அரசின் கீழ் சென்று விடும்.

அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும் நிலை தான் உருவாகும்.

இந்த நிலையில் அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, அபாயகர விபத்துகளைத் தவிர்க்கும் நோக்குடனேயே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏன், அணைகளை மாநில அரசுகளால் பாதுகாக்க முடியாதா? அணைகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மாநில அரசுகளின் கடமையல்லவா? மாநில அரசுகளின் உரிமை அல்லவா? அதனை இத்தனை ஆண்டு காலம் அந்த மாநிலங்கள்தானே செய்து வருகின்றன? இப்போது மட்டும் ஏன் புதிதாக இந்த மாறுதலைச் செய்ய வேண்டும்? அதற்கு என்ன அவசியம் வந்து விட்டது?
தற்போதைய ஒன்றிய அரசு கொண்டு வரும் பெரும்பாலான மசோதாக்கள் மாநில உரிமைகளை மீறுவதாகவே உள்ளது.

சமீபத்தில் கூட, ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமலே ஒன்றிய அரசுப் பணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு மசோதாவை கொண்டு வந்தார்கள். அதே போலத்தான் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. அதனை உணர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

அணை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெறச் செய்வதற்கு கட்சி பேதமின்றி தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img