fbpx
Homeபிற செய்திகள்மேகதாது அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக விவசாயிகள் சங்க...

மேகதாது அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்க தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் கே.எஸ். ஆறு முகம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.வி. சின்னசாமி, மாநிலத் துணைத் தலைவர் செந்தில், தர்மபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஸ்ரீராம் ரெட்டி, மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, கரும்பு டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் குப்புசாமி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ. சின்னசாமி கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர்க்கடன், நகைக்கடன், மத்திய கால மற்றும் நீண்ட கால கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்யும் திட்டத்தில் உள்ள கடுமையான நிபந்தனைகளை கைவிட்டு, காலக் கெடுவை நீட்டித்து அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் எண்ணெகொல் புதூர் திட்டம், தும்பலஅள்ளி கால்வாய் திட்டம், அனியாளம்-தூள்செட்டி ஏரி கால்வாய் திட்டம், பலிக்கரை ஏரி கால்வாய் திட்டம் ஆகிய நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப் புக்கு விரோதமாக தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பறிக்கும் வகையில், கர்நாடக அரசும், கர்நாடக எதிர்க் கட்சியும் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடக் கூடாது என்ற நோக்கத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு விரோதமான இந்த முயற்சியை கைவிட வேண்டும்.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 24-ம் தேதி தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் வரை வாகன ஊர்வலம் மற்றும் ஒகேனக்கலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பெயரில் நெல் உற்பத்தியில் சாதனை புரியும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள தமிழ் நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட ,ஒன்றிய, நகர நிர்வாகிகள், பல்வேறு பிரிவுகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கரும்பு டிராக்டர் உரிமையாளர் சங்க செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img