fbpx
Homeபிற செய்திகள்பனை மரம் ஏறும் கருவி கண்டுபிடித்த கோவை இளைஞர்

பனை மரம் ஏறும் கருவி கண்டுபிடித்த கோவை இளைஞர்

பனை மரத்தை எளிதில் ஏறுவதற்கு துணையாக கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்கு விக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர, 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், இத்திட்டத்திற்கு 2 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடித்த சிலர் அதனை தமிழக அரசுக்கு அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளனர். அதன்படி, கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஸ்ரீவரதன், தான் கண்டுபிடித்த பனை ஏறும் கருவியினை அனைவருக்கும் முன்பாக சோதனை செய்து காண்பித்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் பகுதிக்கு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயந்திரத்தை நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந் தார்.

அத்துடன், பனை ஏறும் கருவியினை கொண்டு பனைத் தொழிலாளர்களுக்கு செய்முறை விளக்கம் பயிற்சியினையும் எம்.பி கனிமொழி தொடங்கி வைத்தார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தில் பனைத் தொழிலாளர்கள் பனைமரத்தில் ஏறி முயற்சி செய்தனர்.

அவர்களுக்கு இயந்திரத்தை எப்படி இயக்குவது என்பது குறித்து ஸ்ரீவரதன் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில் ‘பனை தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட பனை ஏறும் கருவிகள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவிகள் தொழிலாள ர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது’ என்றார்.

தொடர்ந்து, பனை ஏறும் கருவியினை கண்டுபிடித்த கோவை பட்டதாரி இளைஞர் ஸ்ரீவரதன் பேசியதாவது, ‘எனது தந்தை தென்னை மரம் ஏறுவதற்காக கருவி ஒன்றினை தயாரித்தார்.

பின்னர் நான் அவருடன் சேர்ந்து அந்த கருவியினை டெவலப் செய்தேன். பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அந்தக் கருவியை பனை மரம் ஏறும் இயந்திரமாக மாற்றி உள்ளேன்.

தற்போது தொழிலாளர்களுக்கு இயந்திரத்தை பழகுவதற்கு பயிற்சி அளித்து வருகிறோம். ஆரம்பத்தில் 10-மரங்கள் வரை இந்த இயந்திரம் மூலம் எளிதாக ஏற முடியும்.

முழுமையாக கற்றுக்கொண்ட பின் நாள் ஒன்றுக்கு 50 மரங்கள் வரை ஏறலாம். தற்போது இந்த இயந்திரம் புதுச்சேரி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிச்சயம் தமிழகத்தில் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு இந்த இயந்திரம் பயன் உள்ளதாக இருக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img