fbpx
Homeதலையங்கம்அடுத்தடுத்து தீப்பிடிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

அடுத்தடுத்து தீப்பிடிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக் காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தையும் காற்றில் மாசு அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகின்றனர்.

மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்த வாகனங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கூட, வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட முருகேஷ் என்பவரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியைத் தந்தது. பேட்டரி முற்றிலும் சேதமடைந்தது.

இவற்றைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீயில் சேதமடைந்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க அதில் உள்ள பேட்டரி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது, லித்தியம் அயன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பேட்டரி சேதமடைந்தாலோ அல்லது மின் கசிவு காரணமாகவோ தீப்பிடிக்கின்றன.

ஒரு முறை தீப்பிடித்துவிட்டால் இந்த லித்தியம் அயன் பேட்டரி அணைப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.

மேலும் தண்ணீர் மூலம் தீயை அணைத்தால் பேட்டரி ஹைட்ரஜன் கேஸ் மற்றும் லித்தியம் ஹைட்ராக்ஸைட் வாயு வெளியிடும். இந்த கேஸ் பெரும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள கேஸ் என சொல்லப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கியவர்களை கலக்கமடையச் செய்துள்ளது. வாங்க நினைப்பவர்களை அச்சப்பட வைத்துள்ளது. சாலை விபத்து என்பது வேறு; வாகனம் தீப்பிடிப்பது என்பது வேறு. இந்த குறைபாடுகள் உடனே களையப்பட வேண்டும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், இது குறித்து ஆய்ந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். வாகனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மாசு குறையும் என்பதாலும் பெட்ரோல், டீசல் தேவை குறையும் என்பதாலும் தான் வாகனங்களுக்கு மாற்று எரிபொருளைத் தேடுகிறது, நாடு. ஆனால் அதுவே எந்த நேரத்தில் உயிருக்கு உலை வைக்குமோ என்ற நிலை உருவாகி விடக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img