fbpx
Homeதலையங்கம்பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பாரபட்சம்!

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பாரபட்சம்!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் 137 நாட்கள் உயராமல், மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்தது.

இதையடுத்து மார்ச் 22ம் தேதியிலிருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி வருகிறது. விலையை உயர்த்திய முதல் நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.16-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.92.19 -க்கும் விற்பனை ஆனது.

அன்றைய தினத்தில் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் 115.48 டாலரில் வர்த்தகமாகியது. அதற்குபின் இன்றுவரை பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது.

இதற்கிடையில் மார்ச் 23-ம் தேதி ஒரு வாரத்தின் அதிக அளவாக பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் 121.60 டாலரில் வர்த்தகமாகியது.

இச்சூழலில் இன்றைக்கும் சேர்த்து, கடந்த 9 நாட்களில் 8வது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 29 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாய் 33 காசுகளும் உயர்ந்துள்ளது. இதேவேளையில், பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் சுமார் 13 டாலர் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சாவின் விலையை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பது எப்படி சரியாகும்?

தற்போது ஏழை, எளியவர்கள் கூட டூ வீலர்கள் வைத்திருக்கிறார்கள். தினம் 300 ரூபாய், 400 ரூபாய் சம்பாதிப்பவர்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள்? சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்றால், அதன் விலை குறையும் போது ஏன் குறைக்க மறுக்கிறீர்கள்?.

சர்வதேச சந்தையைப் பொறுத்தே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி விலை ஏறுகிறது, இறங்குகிறது. 1000 ரூபாய் ஏறினால் 500 ரூபாயாவது இறங்குகிறது. ஆனால் பெட்ரோல் & டீசல் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது. கொஞ்சம்கூட இறங்க மறுக்கிறதே?

இந்த கேள்விகளைக் கேட்கும் கோடான கோடி மக்களுக்கு ஒன்றிய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?.

போக்குவரத்து செலவு அதிகரித்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் முன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img